டில்லி,
போலியான கணக்கு தொடங்கி, சுமார் 100 கோடி ரூபாய் அளவில் மோசடி செய்துள்ள ஆக்சிஸ் வங்கியில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.
கடந்த 8ந்தேதி இரவு 500, 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் மோடி அறிவித்தார். அதைத்தொடர்ந்து பழைய பணத்தை கொடுத்து புதிய பணம் மாற்றவும், தேவையான பணத்தை வங்கிகளில் இருந்து எடுக்கவும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.
இதன் காரணமாக பொதுமக்கள் அன்றாட செலவுக்கே திண்டாடி வருகின்றனர். கடந்த 1 மாதத்திற்கும் மேலாக இந்தியா முழுவதும் பணப்புழக்கம் தடைபட்டுள்ளது. வங்கிகளிலும் பணம் இல்லை என்றே கூறப்படுகிறது.
ஆனால், கருப்பு பண முதலைகளிடம் கோடிக்கணக்கான புதிய ரூபாய் நோட்டுகள் சென்றுள்ளன. இதன் காரணமாக பணத்தை பதுக்கும் கருப்பு பண முதலைகளுக்கு உடந்தையாக செயல்பட்டு வரும் வங்கிகள் குறித்து கண்காணிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து வங்கிகளில் பல முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக டெல்லி சாந்தினி சவுக் பகுதியில் உள்ள ஆக்சிஸ் வங்கிக் கிளையில் ரூ.100 கோடி மதிப்புள்ள 500, 1000 ரூபாய் நோட்டுகள் பல்வேறு கணக்குகளில் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்தது.
இதையடுத்து வருமான வரித் துறையினர் அந்த வங்கிக் கிளையில் நேற்று திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, போலியான வாடிக்கையாளர்கள் பெயரில் (கேஒய்சி) விவரங்கள் கொடுத்து பல வங்கிக் கணக்குகள் தொடங்கப் பட்டு பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது.
இதன் மூலம் சட்ட விரோதமாக வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டு பிடிக்கப் பட்டுள்ளது.
இதையடுத்து வங்கிக் கணக்குகளை அதிகாரிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். வங்கியே இதுபோல போலியாக கணக்கு தொடங்கியிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.