மும்பை:
கணவரின் தேவைகளை பூர்த்தி செய்யாதது அல்லது பணியில் இருந்து தாமதமாக வீடு திரும்பும் கணவருக்கு தண்ணீர் வழங்காதது போன்றவை எல்லாம் கொடுமை ஆகாது என்று மும்பை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
சாந்தகூரூஸ் பகுதியில் வசிக்கும் 52 வயதான வங்கி ஊழியர் தனது 40 வயது மனைவியை விவாகரத்து செய்வதற்காக குடும்ப நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிமன்றம் விவாகரத்து வழங்க மறுப்பு தெரிவித்தது. இதை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் கணவர் மேல் முறையீடு செய்தார்.
அதில், மனைவி தன்னை கொடுமைபடுத்தியதாக தெரிவித்துள்ளார். ‘‘எனது தேவைகளை மனைவி பூர்த்தி செய்வது கிடையாது. நான் பணியில் இருந்து வெகுநேரம் கழித்து வீடு திரும்பியதும் எனக்கு குடிக்க தண்ணீர் தருவது கிடையாது’’ என்று கொடுமைகளின் பட்டியலை அவர் தெரிவித்திருந்தார். மனைவியும் ஆசிரியராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் கமல்கிஷோர், சாரங் கோத்வால் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச் இந்த மனுவை விசாரித்தது. அப்போது அவர்கள் கூறுகையில், ‘‘அந்த பெண் வேலைக்கு செல்கிறார். அதோடு காலை, மாலை இரு நேரங்களில் சமையல் செய்கிறார். பணி முடித்து வரும் வழியில் காய்கறி வாங்கி வருகிறார். அதனால் அவரும் அசதியாக தான் வீடு திரும்புவார். பின்னர் குடும்பத்துக்காக சமையலும் செய்கிறார். இது போன்று வீட்டு வேலைகளையும் அவர் செய்துள்ளார். அதனால் கணவருக்கு தண்ணீர் கொடுக்காது ஒரு கொடுமை கிடையாது’’ என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், அவர்கள் கூறுகையில், ‘‘ உயர்நீதிமன்றத்தின் நேரத்தை வீணடிக்காமல் இதுபோன்ற வழக்குகள் கீழமை நீதிமன்றங்களிலேயே தீர்வு காண வேண்டும். அதுவே இறுதி தீர்வாக இருக்க வேண்டும். தம்பதியர் கருத்து வேறுபாட்டுடன் வாழ்வதை விட இருவரும் இணைந்து விவாகரத்து பெற்றுக் கொள்வதே சிறந்தது. சரியான ஜிவனாம்சம் கிடைப்பதை நீதிமன்றம் இறுதி செய்ய வேண்டும்’’ என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.