தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ் சார்பில் அன்வர் ரஷீத் இயக்கி இருக்கும் படம் ‘நிலை மறந்தவன்’.

மலையாளத்தில் ‘ட்ரான்ஸ்’ என்கிற பெயரில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற படம் தான் தற்போது தமிழில் ‘நிலை மறந்தவன்’ என்கிற பெயரில் வெளியாக இருக்கிறது.

ராஜமாணிக்கம், உஸ்தாத் ஹோட்டல் ஆகிய சூப்பர்ஹிட் படங்களை இயக்கியதோடு, பிரேமம் போன்ற சூப்பர்ஹிட் படங்களை தயாரித்தவர் அன்வர் ரஷீத்.

மலையாளத்தில் முன்னணி நடிகராகவும் தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் அதிரடி வில்லனாகவும் நடித்துவரும், பஹத் பாசில் நாயகனாக நடித்துள்ளார்.

பாசிலின் மனைவி நஸ்ரியா நசீம், ஒரு சிறிய இடைவேளைக்கு பிறகு இந்தப்படத்தில் நாயகியாக நடித்துள்ளார். இவர் ஏற்கெனவே, ராஜாராணி, நையாண்டி உள்ளிட்ட படங்களில் நாயகியாக தோன்றியவர்.

வில்லன்களாக இயக்குனர் கவுதம் மேனனும் கோலிசோடா-2 படத்தில் நடித்த செம்பான் வினோத்தும் நடிக்கிறார்கள். திமிரு படத்தில் நடித்த விநாயகன் இதில் மனதை தொடும் முக்கிய வேடத்தில் தோன்றுகிறார்.

படம் பற்றி இயக்குநர் கூறும்போது, “மதத்தின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்துவதுடன் அப்பாவி மக்களின் தெய்வ நம்பிக்கையை தங்களுக்கு சாதகமாக்கி அவர்கள் உயிருடன் விளையாடுகிறது ஒரு கும்பல்.

படித்து வேலை கிடைக்காத இளைஞன் ஒருவன் தன்னை அறியாமலேயே இந்த மோசடிக்கு துணை போகிறான். ஒருகட்டத்தில் உண்மை தெரிய வரும்போது அவன் என்ன முடிவெடுக்கிறான் என்பதை மையமாக வைத்து இந்தப்படத்தின் கதை உருவாகியுள்ளது” என்றார்.

விரைவில் வெளியாகவுள்ள இந்தப்படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா வரும் ஏப்-16ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

தொழில்நுட்ப குழு விபரம்

தயாரிப்பு ; தர்மா விஷுவல் கிரியேஷன்ஸ்
இயக்கம் ; அன்வர் ரஷீத்
இசை ; ஜாக்ஸன் விஜயன் – சுஷின் ஷியாம்
ஒளிப்பதிவு ; அமல் நீரத்
படத்தொகுப்பு ; பிரவீன் பிரபாகர்
வசனம் ; சர்வம் கிருஷ்ணார்ப்பணம் (தமிழாக்கம்)
மக்கள் தொடர்பு ; கே.எஸ்.கே. செல்வா