கேப்டவுன்: தென்னாப்பிரிக்க அணியின் முக்கிய வீரர்களில் ஒருவரான டூ பிளசிஸ், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வுபெறுவதாக அறிவித்துள்ளார்.
அடுத்து வரும் இரு டி20 உலகக்கோப்பை மற்றும் டி20 போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் டூப்பிளசிஸ் தெரிவித்துள்ளார்.
அவர் கூறியுள்ளதாவது, “”கடந்த ஆண்டு அனைவரையுமே வாட்டி எடுத்துவிட்டது. எதுவுமே நிலையில்லாமல் இருந்த நிலையில் எனக்குப் பல்வேறு விஷயங்களில் தெளிவு கிடைத்திருக்கிறது. புதிய அத்தியாயத்தை நோக்கி நகர்வதற்கு என் மனது தெளிவாக இருக்கிறது.
என்னுடைய தேசத்துக்காக நான் ஒருநாள், டி20, டெஸ்ட் ஆகிய 3 பிரிவுகளிலும் விளையாடியதைப் பெருமையாகக் கருதுகிறேன். ஆனால், டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து நான் ஓய்வு பெறுவதற்குச் சரியான நேரம் வந்துவிட்டது. இனிமேல் நான் டி20 மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே என் கவனத்தைச் செலுத்தப் போகிறேன்.
அடுத்த இரு ஆண்டுகள் ஐசிசி டி-20 உலகக் கோப்பைக்கான ஆண்டுகளாகும். என்னுடைய குறிக்கோள் அனைத்தும் டி-20 உலகக்கோப்பையை நோக்கி இருக்கிறது. உலகம் முழுவதும் விளையாட விரும்புகிறேன். சிறந்த வீரராகப் பரிணமிக்க முடியும்.
இந்த டி-20 போட்டியில் பங்கேற்க தென்னாப்பிரிக்க வீரர்களுக்கு அதிகமான வாய்ப்புகள் வருகின்றன. அப்படியென்றால் ஒருநாள் போட்டிகளில் விளையாடமாட்டேன் எனும் அர்த்தம் இல்லை. குறுகிய காலத்துக்கு டி-20 போட்டிகளுக்கு மட்டும்தான் முக்கியத்துவம் அளிப்பேன்” என்றுள்ளார் அவர்.