மலச்சிக்கல் மற்றும் குடல் சம்பந்தமான நோய்களுக்கு மல நுண்ணுயிர் மாற்று அறுவை சிகிச்சை மூலம் தீர்வு காண முடியும் என்று மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மலப் பொருளை மருந்தாகப் பயன்படுத்துவதற்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு வாரியம் (US FDA) ஒப்புதல் அளித்துள்ளது. இருந்தபோதும் இந்தியாவில் இதற்கான முறையான அங்கீகாரம் இதுவரை வழங்கப்படவில்லை.
மலம் நுண்ணுயிர் மாற்று அறுவை சிகிச்சை (Faecal Microbiota Transplantation – FMT) மூலம் நாள்பட்ட குடல் நோய், வயிறு தொடர்பான நோய்களுக்கு தீர்வுகாணப்படுவதாக இரைப்பை மற்றும் குடல் சம்பந்தமான மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
நாள்பட்ட அல்சரேட்டிவ் பெருங்குடல் அழற்சி இருப்பவர்களுக்கு அவரது ரத்த சம்பந்தமுள்ள அதே சூழலில் வசிப்பவர்களாக இல்லாத உறவினர்களிடம் இருந்து சேகரிக்கப்பட்ட மலத்தின் மாதிரிகளை மாத்திரை வடிவாக மாற்றி இனிமா கொடுப்பது போன்ற செயல்முறையைக் கையாண்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு குழாய் வழியாக செலுத்தப்படுகிறது.
இதனால் குடல் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குடலில் மீண்டும் பாக்டீரியாக்கள் உற்பத்தி செய்யப்படுவதுடன் அவர்களின் மலசிக்கலுக்கு தீர்வாக அமைகிறது என்று கூறப்படுகிறது.
இந்த செயல்முறையை 15 நாட்கள் இடைவெளியில் மூன்று அல்லது நான்கு முறை மேற்கொள்வதன் மூலம் மலசிக்கல் பிரச்சனைக்கு தீர்வுகாணப்படுவதாக மருத்துவர்கள் உறுதிபட கூறுகின்றனர்.
நுண்ணுயிர் எதிர்ப்பிகள் (Antibiotic), ஸ்டெராய்டுகள் அல்லது வயிற்றுப்போக்கு உள்ளிட்ட குடல் தொற்று (Clostridium difficile – C. diff) ஆகியவற்றால் குடலின் சுற்றுசூழல் அமைப்பு சீர்கெடுகிறது.
செரிமானத்திற்கு உதவும், உடலை ஒழுங்குபடுத்தும் இரசாயனங்களை உற்பத்தி செய்வதோடு தீங்கு விளைவிக்கும் நோய்க்கிருமிகளுக்கு எதிராக நம்மை பாதுகாக்கும் நுண்ணுயிரிகளால் நிரம்பியுள்ள மனித குடலின் முக்கியத்துவத்தை இப்போது தான் பலரும் உணர்ந்துள்ளனர்.
இந்தியாவில் இதுபோன்ற சிகிச்சை ஆராய்ச்சி அளவிலேயே உள்ள நிலையில் இந்த வகை செயல்முறைக்கு இந்திய மருத்துவ அமைச்சகம் இறுதிவடிவம் கொடுக்கும் முயற்சியில் இறங்கியுள்ளதாகக் கூறப்படுகிறது.