சேலம்:

பேஸ்புக் மூலம் அறிமுகமாக காதல் திருமணம் செய்துகொண்ட இளைஞரை அவரது பெற்றோர் வீட்டுச்சிறையில் அடைத்து வைத்திருப்பதாக அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

சேலம் மாவட்டம் கெங்கவல்லி அருகேயுள்ள கடம்பூரைச் சேர்ந்தவர் செல்வம்.  இவரது மகன் வெங்கடேஷ்வரன் (23). பிடெக் படித்த இவர், சென்னையில் தனியார் நிறுவனத்தில் சூப்பர் வைசராக பணிபுரிந்தார்.

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையைச் சேர்ந்த அம்மாசி மகள் மஞ்சுளா வயது. 23.

இருவரும் ஃபேஸ்புக் மூலம் அறிமுகமாகி காதலர்கள் ஆனார்கள். இவர்களது காதல் விவகாரம் வெங்கடேஷ்வரனின் பெற்றோருக்கு தெரியவர,  எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்த நிலையில் காதலர்கள் கடந்த 21ம் தேதி கெங்கவல்லி காவல் நிலையத்தில்  போலீசார் முன்னிலையில் திருமணம் செய்து கொண்டனர். பிறகு இருவரும் மானாமதுரை சென்று குடித்தனம் நடத்தினர்.

இந்த நிலையில் தனது சான்றிதழ்களை எடுக்க கடம்பூரில் உள்ள தனது பெற்றோர் வீட்டுக்கு கடந்த 12ம் தேதி சென்றார். அவரை, பெற்றோர் வீட்டுச் சிறையில் அடைத்துவைத்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கணவரைத் தேடி அங்கு வந்தார் மஞ்சுளா. அவரை வெங்கடேஷ்வரனின் பெற்றோர் வீட்டுக்குள் அனுமதிக்கவில்லை.

இதையடுத்து, தன்னுடைய கணவரை தன்னுடன் அனுப்பி வைக்குமாறு கூறி மஞ்சுளா வீட்டு வாசலிலே கடந்த 2 நாட்களாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

இது குறித்து மஞ்சுளா, “நான் தாழ்த்தப்பட்ட இனத்தைச் சேர்ந்தவள் என்பதால், என் கணவரின் குடும்பத்தினர் என்னை ஏற்க மறுக்கின்றனர். என் கணவருக்கு வேறு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கின்றனர். அவரை வீட்டுச் சிறையில் அடைத்துள்ளனர். அவர்  இல்லாமல் நான் இங்கிருந்து போகமாட்டேன். என்னை கிளம்புமாறு காவல்துறையினர் வற்புறுத்துகின்றனர்.

எனது கணவரை மீட்டுக் கொடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று மஞ்சுளா தெரிவித்துள்ளார்.