சென்னை: கிறிஸ்தவ மத போதகர் எஸ்றா சற்குணம் மறைவுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இசிஐ திருச்சபையின் பேராயாரும், இந்திய சமூக நீதி இயக்கத்தின் தலைவருமான எஸ்ரா சற்குணம் (85 வயது) செப்டம்பர் 22ந்தேதி உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் உள்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘என் பிறந்தநாளில் மட்டுமின்றி மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் போதும் என்னை வாழ்த்த தவறாதவர் எஸ்ரா சற்குணம். கிறிஸ்தவர்களின் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகவும் அவர்களின் நலன் பேணும் தளகர்த்தாவாகவும் செயல்பட்டு வந்தவர். அனைத்து சமூக மக்களின் நன்மதிப்பையும் பெற்றவர். சிறுபான்மையினர் நலன் பாதுகாக்கப்படவும், அவர்கள் உரிமைகள் வென்றெடுக்கப்படவும் வாழ்நாள் முழுவதும் பாடுபட்டவர்.

திராவிட இயக்க கருத்தியலுடன் பின்னிப்பிணைந்தவர். கலைஞருடன் நெருக்கமான நட்பும், அன்பும் கொண்டிருந்தவர். எஸ்ரா சற்குணம் பிறந்தநாளில் நடக்கும் நிகழ்ச்சிகளில் அவரோடு கருத்துக்களை பரிமாறிய தருணங்கள் நெஞ்சில் நிழலாடுகிறது. பேராயர் எஸ்ரா சற்குணம் மாறாத அன்போடு என்னுடன் பழகியவர். அவர் உடல் நலக்குறைவால் மறைவுற்றார் என்ற செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். அவரை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், நண்பர்களுக்கு ஆழ்ந்த இரங்கல் ‘ என தெரிவித்துள்ளார்.