சென்னை: கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரிக்காத வகையில், மக்கள் கூடும் இடங்களில் தீவிர கட்டுப்பாடுகள் விதிக்க சென்னை மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது,

‘பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் கோவிட் தொற்று பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க மாநகராட்சி காவல்துறையுடன் இணைந்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. தற்பொழுது தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய 2 தினங்களில் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் பொதுமக்கள் அதிகம் வருவதாக பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் மாநகராட்சியின் சார்பில் காவல் துறையுடன் இணைந்து கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் பாதுகாப்பு வழிமுறைகள் முறையாக பின்பற்றுவதை உறுதிசெய்ய கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி அங்காடிகள் மற்றும் இதர கடைகள் ஆகியவற்றில் கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் அதற்குரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். வாடிக்கையாளர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் முகக்கவசம் அணிதல் சமூக இடைவெளியை பின்பற்றுதல், அவ்வப்பொழுது கைகழுவும் திரவம் (அ) சோப்பு கரைசல் கொண்டு கைகளை சுத்தம் செய்தல் போன்ற பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

மேலும், 50 சதவீத வாடிக்கையாளர்களுடன் உணவகங்கள், வணிக நிறுவனங்கள், அங்காடிகள் செயல்படுகின்றனவா என சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமையாளர்கள் உறுதிசெய்ய வேண்டும். அங்கு பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் கடைக்கு வரும் வாடிக்கையாளர்களுக்கு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்பநிலை சீரான நிலையில் உள்ளதா என பரிசோதனை செய்ய வேண்டும். பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் முகக்கவசம் மற்றும் கையுறைகளை கட்டாயம் அணிய வேண்டும். மேலும், கடைகளின் வாயிலில் டெட்டால் (அ) சானிடைசர்கள் போன்ற கைக்கழுவும் திரவங்கள் கட்டாயம் இருக்க வேண்டும். கடைகளுக்கு செல்லும் பொழுது பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர்கள் டெட்டால் (அ) சானிடைசர்கள் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்பு தான் கடைக்குள் அனுமதிக்க வேண்டும். கண்காணிப்புக் குழுக்களின் ஆய்வின்போது மேற்குறிப்பிட்ட அரசின் பாதுகாப்பு வழிமுறைகள் கடைப்பிடிக்கப்படாமலும், பாதுகாப்பு ஏற்பாடுகளின்றி இருப்பதும் தெரியவந்தால் தொற்று நோய்கள் சட்டம் 1897 பிரிவு 2-ன் கீழ் சம்பந்தப்பட்ட கடைகள் மற்றும் வணிக வளாகங்களுக்கு கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். எனவே, வார இறுதி நாட்களான சனி மற்றும் ஞாயிறு ஆகிய நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களான வணிக வளாகங்கள் மற்றும் அங்காடிகள் ஆகியவற்றில் அரசின் நிலையான பாதுகாப்பு வழிமுறைகளை தீவிரமாக கடைப்பிடிக்க வேண்டும் என பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் கேட்டுக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.