தஞ்சாவூர்:

ஞ்சை பெரியக்கோவிலில் நாளை குடமுழுக்கு விழா நடைபெறுவதை முன்னிட்டு பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. குடமுழுக்குக்கு தேவையான நவதானியங்கள், மூலிகைகள், புனித நீர் மற்றும் தேவையான பொருட்கள் குவிக்கப்பட்டு உள்ளது. வேத விற்பன்னர்களும் கோவிலில், குடமுழுக்கை விழாவை சிறப்பிக்க தயாராக உள்ளனர்.

தஞ்சை பெரிய கோவிலில் 23 ஆண்டுகளுக்கு பிறகு நாளை காலை 9 மணி முதல் 10 மணிக்குள் குடமுழுக்கு நடைபெற இருக்கிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள் கடந்த மாதம் 27ம் தேதி தொடங்கிய நிலையில், கடந்த 1ந்தேதி முதல் யாக சாலை பூஜைகள் நடைபெற்று வருகின்றன. கோவில் விழாவை காண தினசரி ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டு வந்துகொண்டிருக்கின்றனர்.

பெருவுடையார் கோவில் இன்று காலை காலை 6ம் கால யாக சாலை பூஜை நடைபெற்ற நிலையில்  மாலையில் 7ம் கால யாக சாலை பூஜையும் நடைபெற  உள்ளது. அதைத்தொடர்ந்து நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நாளை அதிகாலை 4.30 மணிக்கு 8ஆம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. அதனைத்தொடர்ந்து காலை 7.25 மணிக்கு யாகசாலையில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்று காலை 9.30 மணிக்கு அனைத்து விமானம் மற்றும் ராஜகோபுரத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.

காலை 10 மணிக்கு பெருவுடையார், பெரியநாயகி அம்மன் மற்றும் அனைத்து மூலவர்களுக்கும் கும்பாபிஷேகம் நடக்கிறது. யாக பூஜைக்காக 110 குண்டங்களும், 22 வேதிகைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

குடமுழுக்கு விழா நிகழ்ச்சியில் 300 சிவாச்சாரியர்கள்  பூஜையில் 300 சிவாச்சாரியார்களும், 60 ஓதுவார்களும் பங்கேற்றுள்ளனர்.

குடமுழுக்கு விழாவினை காண வரும்  பக்தர்கள் மெட்டல் டிடெக்டர் மற்றும் ஸ்கேனர் கருவி மூலம் பரிசோதனை செய்த பின்னரே பூஜை நடைபெறும் இடங்களுக்கு அனுமதிக்கப்படுகிறார்கள். இன்றும், நாளையும் பக்தர்களின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் கோவிலை சுற்றி 5 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளதுடன், நகர் முழுவதும் சுமார் 5 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பல்வேறு பகுதியில் இருந்து பக்தர்கள் வருவதற்கு ஏதுவாக 250க்கும் மேற்பட்ட சிறப்பு பேருந்துகள் மற்றும் ரயில்கள் இயக்கப்படுகின்றன.