சென்னை: மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த கால அவகாசம் நீட்டித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஏற்கனவே 2016 அல்லது அதற்கு முன்னர் பதிவுசெய்யப்பட்ட மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஏற்கனவே வழங்கப்பட்ட கால அவகாசம் நிறைவடைந்ததால் மேலும் கால அவகாசம் நீட்டித்து அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
அதன்படி, 29.02.2024 வரை கால அவகாசத்தை நீட்டித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை சார்பில் அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இந்த திட்டத்தில் இணைய வழி மட்டுமே மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்க முடியும் என அறிவிக்கப்பட்டள்ளது.
சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வீட்டு வசதித்துறை அமைச்ச முத்துசாமி, 2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக கட்டப்பட்ட மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் வரன்முறைப்படுத்த ஆறு மாத காலம் அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். கட்டுமான பொறியாளர்கள், கட்டுமான நிறுவன உரிமையாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் 44 கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அதில் 18 கோரிக்கைகள் நிறைவேற்ற முடியாது என்று கூறிவிட்டோம் என்றவர்,
மதுரை, திருவண்ணாமலை கோவில் அதிகம் உள்ள இடங்களில் தொடர் கட்டுமானம் வேண்டும் என்ற கோரிக்கை வைத்துள்ளனர். இந்த கோரிக்கையானது கடந்த 10 ஆண்டுகளாக வைத்துக்கொண்டிருக்கிறார்கள். முன்னதாக மாநகராட்சி, பஞ்சாயத்து அமைப்புகள் தொடர் கட்டுமான அனுமதியை கொடுப்பதற்கு வாய்ப்பு இருந்தது. 2019-ஆம் ஆண்டு புதிய விதி உருவாக்கப்பட்டது. அதன் காரணமாக தொடர் கட்டுமானம் கொண்டு வருவதற்கு வாய்ப்பில்லாமல் போனது. தொடர் கட்டுமானம் எந்தெந்த பகுதிகளில் தேவை என்பதை ஆராய்ந்து வருகிறோம் என்று தெரிவித்தார்.
அதிமுக ஆட்சிக்காலத்தில் மாஸ்டர் பிளான் 7 சதவிகிதம் தான் கவர் ஆகியிருந்தது. திமுக ஆட்சிக்காலத்தில் 19 சதவிகிதமாக கொண்டு வருவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 135 மாஸ்டர் பிளான் கொண்டு வர இருக்கிறோம்.
2016-ஆம் ஆண்டுக்கு முன்பாக மனைப்பிரிவு அங்கீகாரம் பெறாமல் இருந்தால் வரன்முறைப்படுத்தும் திட்டத்தின்படி அங்கீகாரம் பெற வாய்ப்பு கொடுக்கப்பட்டிருந்தது. கால அவகாசம் முடிந்தும் வரன்முறைப்படுத்த விண்ணப்பிக்காதவர்கள் உள்ளனர். 2016-ஆம் ஆண்டுக்கு முன்பு அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகள் மற்றும் தனி மனைகளை வரன்முறைப்படுத்த 6 மாத கால அவகாசம் கொடுத்துள்ளோம். சாலை அளவுகளை பொறுத்து தான் வீடுகள் எத்தனை மாடி கட்டலாம் என்ற அளவுகோல் உள்ளது. எந்த கட்டிடத்தையும் அனுமதியில்லாமல் கட்டாதீர்கள். விதிமீறல் இருந்தால் வீடு சீல் வைக்கப்படும் என எச்சரித்துள்ளார்.