சென்னை: செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நீட்டித்த நீதிமன்றம், அவரை குற்றச்சாட்டு பதிவுக்காக நேரில் ஆஜர்படுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது.
சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்ட வழக்கில் திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டு கடந்த ஒராண்டை கடந்தும் சிறையில் வாடி வருகிறார். இதற்கிடையில் அவ்வப்போது உடல்நிலை சரியில்லை என அரசு மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் நீதிமன்ற விசாரணைகளின்போது, காணொளி காட்சி மூலம் அவர் சிறை மருத்துவமனையில் சிகிச்சை பெறுவது போன்ற வீடியோக்கள் காண்பிக்கப்படுகிறது. இது விமர்சனங்களை ஏற்படுத்தி வருகிறது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் காவல்நீட்டிப்பு தொடர்பான நேற்றைய (ஆகஸ்டு 7ந்சதேதி) விசாரணையின்போதும், அவர் படுக்கையில் படுத்திருக்கும் வகையில் காவல்துறையினர் காணொளி காட்சி மூலம் விசாரணைக்கு ஆஜர் படுத்தினார். இதையடுத்து, அவரது காவலை நீட்டித்தது.
இந்நிலையில், குற்றச்சாட்டு பதிவைத் தள்ளிவைக்க வேண்டும் என செந்தில் பாலாஜி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார். உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குற்றச்சாட்டு பதிவை மேற்கொள்ளக்கூடாது தள்ளிவைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டும் இருந்தது. மேலும், காணொளி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்ய ஆட்சேபம் இல்லை என அமலாக்கத்துறை தரப்பில் இருந்தும் சொல்லப்பட்டது.
இந்த நிலையில், செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை நாளை வரை ஒத்திவைத்த சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி, நாளை மீண்டும் நேரில் ஆஜர் செய்ய உத்தரவு பிறப்பித்துள்ளார்.
“நேரில் ஆஜர்படுத்தப்படவில்லை என்றால் காணொலி மூலம் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படும்” என்றும் நீதிபதி தெரிவித்துள்ளார். இதனையடுத்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்ட வழக்கில் குற்றச்சாட்டு பதிவுக்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி நாளை நேரிலோ அல்லது காணொளி மூலமாகவோ ஆஜராக உள்ளார்.