தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பட்டாசு ஆலையில் திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தால் கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த வெடிவிபத்தில் 4 பேர் பலியாகி உள்ளனர்.
பட்டாசு ஆலைகளில் ஏற்படும் வெடிவிபத்துக்கள் தொடர்கின்றன. இதை தடுக்க பல்வேறு முன்னேற்பாடுகளை செய்ய தீயணைபப்பு துறை, காவல்துறை வலியுறுத்தி கட்டுப்பாடுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. இருந்தாலும் ஆலை வெடிவிப்பத்து தொடர்ந்துகொண்டேதான் இருக்கின்றன.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே துறையூரில் பட்டாசு ஆழியில் இன்று காலை ஏற்பட்ட திடீர் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கோவில்பட்டி ராஜீவ் நகரைச் சேர்ந்தவர் பிரபாகரன் என்பவருக்கு சொந்தமான அந்த நிலையில், இந்த வெடிவிபத்து நடைபெற்றுள்ளது.
இந்த ஆலையில் மொத்தமாக 45 கட்டடங்கள் உள்ளன. ஒவ்வொரு கட்டடத்திலும் வெவ்வேறு பட்டாசுகள் தயாரிக்கப்படுகின்றன. இதில் ஒரு கட்டடத்தில் இன்று, பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம் பவுடர், சல்பர் ஆகிய 3 ரசாயனங்களைக் கொண்டு, ஃபேன்சி ரக பட்டாசுகள் தயாரிப்பதற்காக குழாயில் மருந்து செலுத்தும் பணியின்போது, திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.
இதனால் அந்தக் கட்டடம் முழுவதும்இடிந்து விழுந்து தரைமட்டமானது. விபத்தில் சிக்கி ஈராச்சியை சேர்ந்த ராமர், தொட்டம்பட்டியைச் சேர்ந்த ஜெயராஜ், குமாரபுரத்தைச் சேர்ந்த தங்கவேல் (43), நாலாட்டின்புதூரைச் சேர்ந்த கண்ணன் (48) ஆகியோர் இடிபாடுகளுக்குள் சிக்கி உயிரிழந்தனர்.
பட்டாசு ஆலை வெடி விபத்து குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையினர் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தகவலறிந்த உடனே ஆட்சியர், எஸ்பி, டிஎஸ்பி உள்ளிட்டோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.