விருதுநகர்: விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் இன்று பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் ஆலையில் பணியாற்றிக் கொண்டிருந்த 5 தொழிலாளர்கள் உடல்கருகி பலியானர்கள்.
தமிழகத்தில் சுமார் 2ஆயிரத்துக்கும் மேற்பட்ட பட்டாசு ஆலைகள் உள்ளன. விருதுநகா் மாவட்டத்தில் மட்டும் சுமார் 1500 பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றன. இதில் சுமார் 40 சதவிகிதம் அரசின் அனுமதியில்லாமல் செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குடிசை தொழில்போல விருதுநகர், சிவகாசி உள்பட அந்த பகுதிகளில் பட்டாசுகள் வீடுகளில் தயாரிக்கப்பட்டு வருகிறது. இந்த தொழிலில், சுமாா் ஏழு லட்சம் தொழிலாளா்கள் ஈடுபட்டு வருகின்றனா். இவர்களில் 50 சதவிகிதம் பேர் பெண்கள் கூறப்படுகிறது.
விருதுநகா், சிவகாசி, கிருஷ்ணகிரி, அரியலூா் போன்ற மாவட்டங்கள் வறட்சி மிகுந்தவை. வானம் பாா்த்த பூமியாக இருப்பதால் விவசாயம் மிகவும் குறைவு அந்த பகுதியில் முறையான தொழில்வளர்ச்சி இல்லாத காரணத்தால், குடும்பத்தின் வாழ்வாதாரத்தை பேணவே பெண்களும் பட்டாசு தொழில்களுக்கு செல்லவேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. வாழ்வாதாரத்துக்கு வேறு தொழில்கள் இல்லாத காரணத்தால், ஆண், பெண் என அனைவரும், உயிரைப் பணயம் வைத்து இந்தத் தொழிலில் அனைவருமே ஈடுபடுகின்றனா்.
இதை பயன்படுத்திக்கொண்டு பல ஆலைகள் உரிய அனுமதி மற்றும் பாதுகாப்பு இன்றி செயல்பட்டு வருகின்றன. இதை கண்காணிக்க வேண்டிய அரசு அதிகாரிகளும் கையூட்டு பெற்றுக்கொண்டு கண்டுகொள்ளாமல் இருப்பதால், பட்டாசு ஆலைகளால் ஏற்படும் விபத்துகளும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
தொழிலாளா்கள் அனைவரும் தினக் கூலிகளாக வேலை செய்வதால் எந்தவித பணிப் பாதுகாப்பும் அவா்களுக்கு செய்து தரப்படுவதில்லை. சில இடங்களில் உரிமம் காலாவதியான பின்னரும் தொடா்ந்து தொழிற்சாலையை இயக்குவது, குறிப்பிட்ட எண்ணிக்கைக்கு மேல் அதிக தொழிலாளா்களை ஈடுபடுத்துவது, பாதுகாப்பு உபகரணங்கள் இல்லாதது உள்ளிட்ட பல காரணங்களால் இதுபோன்ற விபத்துகள் நிகழ்கின்றன.
இந்த நிலையில், விருதுநகரை அடுத்த ராமு தேவன்பட்டியில் பட்டாசு ஆலையிலி இன்று காலை திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இதில், 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்த நிலையில், 5 பேர் உயிரிழந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் விரைந்த வந்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்,. தீயணைப்பு துறை வீரர்கள் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.