சண்டிகர்:
வாழைப்பழத்துக்கு ஜிஎஸ்டி வரி வசூலிக்கப்பட்டது குறித்து, ஓட்டல் நிர்வாகத்துக்கு விளக்கம் கேட்டு, சண்டிகர் மாவட்ட கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் நோட்டீஸ் அனுப்பி உள்ளார்.
இந்தி நடிகர் ராகுல் போஸ்ஸிடம் இருந்து 2 வாழைப்பழத்துக்கு 442 ரூபாய் பில் வசூல் செய்த விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், சண்டிகர் காவல்துறை துணை ஆணையர் மற்றும் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் மண்டிப் சிங் பிரார் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
பிரபல இந்தி நடிகர் ராகுல் போஸ் சமீபத்தில் சண்டிகரில் உள்ள 5 ஸ்டார் ஓட்டலில் தங்கினார். அப்போது சாப்பிடுவதற்காக 2 வாழைப்பழம் தேவை என ஓட்டலில் ஆர்டர் செய்துள்ளார். அதைத்தொடர்ந்து, அவரது அறைக்கு 2 வாழைப்பழத்தொடு வந்த ஓட்டல் ஊழியர் 2 வாழைப் பழத்தையும், அதற்குண்டான பில்லையும் டேபிளில் வைத்துவிட்டு சென்று விட்டார்.
பில்லைக் கவனித்த ராகுல் போஸ் அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து, தனது டிவிட்டர் பக்கத்தில் வீடியோ பதிவிட்டிருந்தார். இந்த வீடியோ வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
அதைத்தொடர்ந்து, இதுகுறித்து சண்டிகர் காவல்துறை துணை ஆணையர் மற்றும் கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் மண்டிப் சிங் பிரார் இந்த விவகாரம் குறித்து விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டிருந்தனர்.
இதுதொடர்பாக கலால் மற்றும் வரிவிதிப்புத் துறை. ஜே.டபிள்யூ மேரியட் ஹோட்டலுக்கு விளக்கம் கேட்டுநோட்டீஸ் அனுப்பியது. வரி இல்லாத ஒரு பொருளுக்கு வரி எவ்வாறு வசூலிக்கப்பட்டது என்பது குறித்து பிரிவு 35 ல் உள்ளதை சுட்டிக்காட்டி பதில் அளிக்க வலியுறுத்தி உள்ளது.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய, சண்டிகர் உதவி கலால் மற்றும் வரிவிதிப்பு ஆணையர் (ஏ.இ.டி.சி) ராஜீவ் சவுத்ரி, இந்த விவகாரம் தொடர்பாக ஓட்டல் நிர்வாகத்தினரை நாங்கள், விசாரணைக்கு அழைத்தோம். ஆனால், அவர்கள் வராத நிலையில், தற்போது, “நாங்கள் ஷோ-காஸ் நோட்டீஸ் அனுப்பியுள்ளோம், அவர்களிடமிருந்து பதில் கோரியுள்ளோம். வாழைப் பழங்களுக்கு வரி விலக்கு என்ன. ஆனால், எவ்வாறு வரி விதித்தார்கள் என்பதை விளக்குமாறு அவர்களிடம் கேட்டுள்ளோம்” என்று தெரிவித்து உள்ளார்.
இதற்கு பதில் அளித்துள்ள ஓட்டல் நிர்வாகம், தங்களுக்கு சனிக்கிழமை வரை அவகாசம் தேவை என்று கேட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மேலும், குறிப்பிட்ட ஹோட்டல் அரசாங்கத்துக்கு வரி செலுத்துகிறதா என்பது குறித்த விசாரணையும் நடந்து வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. ஓட்டல்மீதான, குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஹோட்டலுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.
இதற்கிடையில், நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினரும் ஜிஎஸ்டி நிபுணருமான அஜய் ஜாகா, இந்த விஷயத்தில் விளக்கம் கோரி, நுகர்வோர் விவகார இயக்குநருக்கு கடிதம் எழுதி உள்ளார்.
அதில், “ஒரு உயர் வகுப்பு ஹோட்டலில் வரி விலக்கு இல்லாத புதிய பழங்களுக்கு ஜிஎஸ்டி 18% வசூலிப்பது தொடர்பான சமீபத்திய சர்ச்சை ஒரு பாடமாகும், இதில் ஒரு ஆலோசகர் நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில், பரிசீலிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளார்.