டில்லி

டனடியாக குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி போட வேண்டியதில்லை எனத் தேசிய நோய்த் தடுப்புக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ் முலியில் கூறி உள்ளார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு உலகெங்கும் கொரோனா தொற்று பரவியது.  உலகமே இதனால் முடங்கியது.  கொரோனா தடுப்பூசி கண்டு பிடிக்கப்பட்டதால் தற்போது இயல்பு நிலை திரும்பி வருகிறது.  இந்தியா உலக அளவில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதில் முன்னணியில் உள்ளது.  ஆயினும் தற்போது 18 வயதுக்குக் குறைந்த குழந்தைகளுக்கு தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கவில்லை

இது குறித்து தேசிய நோய்த் தடுப்புக் குழு உறுப்பினர் ஜெயப்பிரகாஷ்  முலியில், “இப்போதைக்குக் குழந்தைகளுக்கு கொரோனா தடுப்பூசி தேவையில்லை.   இதை எங்கள் குழு மத்திய அரசிடம் வலியுறுத்தி உள்ளது.  இதுவரை இந்தியாவில் 12 வயதுக்குக் கீழே உள்ள ஒரு குழந்தை கூட கொரோனாவால் உயிர் இழக்கவில்லை.” எனத் தெரிவித்துள்ளார்.

ஜெயப்பிரகாஷ் முலியில் நாட்டின் முன்னணி தொற்று நோயியல் மருத்துவர் ஆவார்.  இவர் தமிழகத்தில் உள்ள வேலூர் கிறித்துவ மருத்துவக் கல்லூரி முதல்வராகப் பணி புரிந்துள்ளார்.  தற்போது இவர் மத்திய அரசின் தேசிய நோய்த் தடுப்பு தொழில்நுட்ப ஆலோசனைக் குழு உறுப்பினராக உள்ளார்.