சென்னை: போட்டித்தேர்வுகளில் கட்டாயத் தமிழ்த்தாள் தேர்வில் இருந்து மாற்றுத்திறனாளிகளுக்கு விலக்கு அளிக்கப்படுவதாக தமிழகஅரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தில் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்த நிலையில், மாற்றுத்திறனாளிளுக்கு தமிழ்த்தாள் தேர்வில் விலக்கு அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அரசு பணிகளுக்காக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வாயிலாக தேர்வு நடத்தப்பட்டு,தகுதி வாய்ந்த நபர்களுக்கு பணி வழங்கப்பட்டு வருகிறது. நடைபெறும்  குரூப் 1, குரூப் 2 ,குரூப் 2ஏ போன்ற இரண்டு நிலைகளைக் கொண்ட தேர்வுகளில் முதன்மை எழுத்து தேர்வான கட்டாய தமிழ்மொழித் தாள் தகுதித் தேர்வில் குறைந்தது 40 மதிப்பெண்கள் எடுக்க வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள தெரிவு முகமைகளால் நடத்தப்படும் போட்டித் தேர்வுகளில், தமிழ் மொழி தகுதித் தேர்வை எழுத மாற்றுத்திறனாளிளுக்கு விலக்கு அளித்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. TNPSC, TRB, காவலர் தேர்வு என்று அனைத்து வகையான போட்டித் தேர்வுகளில் கட்டாய தமிழ்த் தாள் தேர்வை எழுதுவதில் இருந்து அனைத்து வகை மாற்றுத்திறனாளி தேர்வர்களுக்கும் விலக்கு  அளிக்கப்பட்டுள்ளது.  40%க்கும் குறைவான குறைபாடுகளை கொண்ட மாற்றுத் திறனாளிகளுக்கும் அரசாணை பொருந்தும்.  விலக்கு பெற விரும்புவோர் உரிய மாற்றுத்திறனாளி சான்றிதழ் சமர்ப்பிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பானது அனைத்து போட்டித் தேர்வுகளுக்கும் மற்றும் நியமன அலுவலர்கள் தேவைப்படும் தேர்வுகளில் நடத்தப்படும் எழுத்து தேர்வுகளுக்கும் பொருந்தும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.