டிஜிட்டல் இந்தியாவின் அபரிமிதமான வளர்ச்சி மின்னல் வேகத்தில் சென்றுகொண்டிருக்கும் நிலையில், மற்றொரு புறம் அதன் காரணமாக ஏற்படும் சீரழிவுகளும், பாதுகாப்பற்ற இணையதள பயன்பாடுகளும், போர்ஜரி மற்றும் தவறான தகவல்களும், இணையதள திருட்டுகளும் அதிகரித்து வருகின்றன.

இந்த நிலையில், தமிழக மின்துறைக்கு, ஆன்லைன் மூலம் (tnebnet.org ) பணம் கட்டும் பயனர்களின் தகவல்கள் ஹேக்கர்களால் திருடப்பட்டுள்ள தகவல் வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து பயனர்களின் நலன்கருதி, இந்த தகவல்களை பத்திரிகை.காம் (https://www.patrikai.com/)  இணையதளம் வாசகர்களுக்கு எச்சரிக்கை செய்கிறது…

15.07.2017 அன்று ஹேக்கர்கள் குழு ஒன்றில் தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழகத்தின் வழியே இணையத் தளம் வழியாக மின்சாரக்கட்டணம் செலுத்தும் பயனாளர்களின் விபரம் மற்றும் கடவுச்சொல் ஆகியவற்றை முழுமையாக ஹேக்கர்கள் குழு, மற்றொரு இணையதளத்தில் பதிவிட்டுள்ளது. 

அதில்,  உள்ள விபரங்களை பத்திரிக்கை.காம் தொழில்நுட்ப குழு  ஆய்வு செய்தபோது, அதில் வெளியிடப்பட்டுள்ள  பல பயனர்களின்  விபரங்கள் உண்மையானதாகவே இருந்தது. அது மட்டுமின்றி,  தமிழ்நாடு மின் உற்பத்தி பகிர்மானக்கழகத்தின் 5 தரவுத் தளங்களின் டேட்டாபேஸ் விபரங்களுக்கும், உயர் அலுவலர்களின் பயனாளர் பெயர் , கடவுச்சொல்லும் வெளியிடப்பட்டிருந்தது. இது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழக பயனர்களின்  விபரங்கள் திருட்டு (Hacking) குறித்து, தமிழக சைபர் கிரைம் துறை கவனத்திற்கும் பத்திரிக்கை.காம் தொழில்நுட்ப குழு ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளது. தற்போதைய நிலையில், பயனாளர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு நாங்கள் இணையத்தள விபரங்களை பொதுவில் தெரிவிக்கவில்லை. ஆனால் சைபர் கிரைம் துறைக்கு நாங்கள் முழுமையான தகவல்களை கொடுத்துள்ளோம் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறோம்…

எனவே தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தின் இணையத்தளம் வழியே மின்சார கட்டணம் செலுத்தும் பயனர்கள் அனைவரும்,  தங்கள் கடவுச்சொல்லை, உடனே  முழுமையாக மாற்றிக்கொள்ளும்படி பத்திரிக்கை.காம் அனைவரையும் அன்போடு கேட்டுக்கொள்கிறது.

தற்போது வெளியாகி உள்ள தரவுகள், 2017ம் ஆண்டு வரையான தரவுகள் என்பதால் 2017ம் ஆண்டுக்கு பின் கணக்கு துவக்கியவர்கள் கவலைப்படத் தேவையில்லை என்றாலும், இணையதளம் மூலம் பணப் பரிவர்த்தனை செய்பவர்கள், அடிக்கடி தங்களது  மின்னஞ்சல் முகவரி உள்பட கடவுச்சொல்லையும் மாற்றுவது  நல்லது.

வாசகர்களே நீங்கள் எந்தவொரு இணையதளத்தின் மூலம் பரிவர்த்தனைகள் செய்து வந்தாலும், அதன் கடவுச் சொல்லை மாதத்திற்கு ஒரு முறையாவது மாற்றுவது நல்லது…

-செல்வமுரளி