பெங்களூரு

ர்நாடகாவில் மாநிலங்களவை உறுப்பினராக வேட்பு மனுத் தாக்கல் செய்த தேவே கவுடா உள்ளிட்ட  நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

இந்த மாதத்துடன் கர்நாடக மாநிலத்தில் இருந்து மாநிலங்களவைக்குத் தேர்வு செய்யப்பட்ட நான்கு பேர் பதவிக்காலம் முடிவடைகிறது.  இந்த 4 இடங்களுக்கும் வரும் 19 ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது.   கர்நாடக சட்டப்பேரவை உறுப்பினர் எண்ணிக்கையின் படி பாஜகவைச் சேர்ந்த இருவரும் காங்கிரஸ் மற்றும் மஜதவில் இருந்து ஒருவரும் தேர்வு செய்ய வாய்ப்பு இருந்தது.

மஜத மற்றும் காங்கிரஸ் உறுப்பினர்கள் வற்புறுத்தலுக்கு இணங்க மஜத தலைவர் மற்றும் முன்னாள் பிரதமரான தேவே கவுடா தனது கட்சியின் சார்பில் வேட்புமனு தாக்கல் செய்தார்.  காங்கிரஸ் கட்சியின் சார்பில் முன்னாள் மத்திய அமைச்சர் மல்லிகார்ஜுன கார்கே வேட்புமனு தாக்கல் செய்தார்.

இதைத் தவிர பாஜக சார்பில் அசோக் கஸ்தி, மற்றும் ஈரண்ணா கடதி ஆகியோர் வேட்பு மனு அளித்த நிலையில் சங்க்மேஸ்வர குந்து என்பவர் சுயேச்சையாக மனு அளித்தார்.  இந்த மனுக்கள் கடந்த 9 ஆம் தேதி பர்சீலிக்கபட்ட போது சுயேச்சை வேட்பாளர் மனு தள்ளுபடி செய்யப்பட்டு மற்ற நால்வரின் மனு ஏற்கப்பட்டது.

வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கான கடைசி நாள் நேற்றுடன் முடிவடைந்தது.

தேர்தல் அதிகாரி விசாலாட்சி வேட்பு மனுத் தாக்கல் செய்த மஜத வேட்பாளர் தேவே கவுடா, காங்கிரஸ் வேட்பாளர் மல்லிகார்ஜுன காட்கே, மற்றும் பாஜக வேட்பாளர்கள்  அசோக் கஸ்தி மற்றும் ஈரண்ண கடதி உள்ளிட்ட நால்வரும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டதாக அறிவித்துள்ளார்.