போபால்:

த்தியபிரதேச மாநிலத்தில் எழுந்துள்ள அரசியல் நெருக்கடி காரணமாக, கமல்நாத் அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரி மாநில பாஜக சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. முன்னாள் முதல்வர் சிவ்ராஜ்சிங் சவுகான் வழக்கை தாக்கல் செய்துள்ளார்.

மத்திய பிரதேச மாநிலத்தில் கமல்நாத்துக்கு எதிராக சிந்தியா ஆதரவு 6 அமைச்சர்கள் உள்பட  22 எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ள நிலையில், அவர்களில் 16எம்எல்ஏக்களின் ராஜினாமாவை சபாநாயகர் இதுவரை ஏற்கவில்லை. அங்கு  காங்கிரஸ் அரசுக்கு நெருக்கடி எழுந்துள்ளது. இதையடுத்து,  நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த வலியுறுத்தப்பட்டு வருகிறது

இந்த பரபரப்பான சூழ்நிலையில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. கூட்டத்தொடரின் முதல்நாளான இன்று கவர்னர் லால்ஜி தாண்டன் உரையாற்றினார். ஆனால் ஒரு நிமிடம் மட்டுமே உரையாற்றிய அவர், சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் அரசியலமைப்பு மரபுகளை பின்பற்றவும், ஜனநாயகத்தின் கண்ணியத்தை பராமரிக்கவும், மாநிலத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையில் அமைதியாக செயல்படவும் ஆளுநர் கேட்டுக்கொண்டு, வெளியேறினார்.

இன்றைய கூட்டத்துக்கு ராஜினாமா ஏற்கப்படாத அதிருப்தி காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 16 பேரும் சபைக்கு வராத நிலையில், அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என பாஜக எம்எல்ஏக்கள் வலியுறுத்தி முழக்கமிட்டனர். ஆனால் நம்பிக்கை கோரும் தீர்மானம் கொண்டு வரப்படவில்லை. ஆனால், கொரோனாவை காரணம் கூறி, சபையை மார்ச் 26-ம் தேதி வரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதனையடுத்து மத்திய பிரதேச முன்னாள் முதல்வரும், பாஜகவின் மூத்த தலைவருமான சிவராஜ் சிங் சவுகான், உச்ச நீதிமன்றத்தை நாடினார். மாநிலத்தில் நிலவும் அரசியல் நெருக்கடியை கருத்தில் கொண்டு நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி கமல்நாத் அரசுக்கு உத்தரவிடவேண்டும் என அவர் தனது மனுவில் கூறியுள்ளார்.

மார்ச் 16 ம் தேதி நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும்படி முதல்வருக்கு  ஆளுநர் பிறப்பித்த உத்தரவை நிறைவேற்றாததால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக  அட்வகேட் ஜெனரல் புருஷைந்திர கவுரவ் கூறியுள்ளார்.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அதேவேளையில், சபை ஒத்தி வைக்கப்பட்டுள்ளதால், ஆட்சியைக் காப்பாற்றும் முயற்சிக்கு போதிய அவகாசம் கிடைத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.