கோலாலம்பூர்

ந்தியாவைச் சேர்ந்த இஸ்லாமிய மத போதகர் ஜாகிர் நாயக் குடியுரிமையை ரத்து செய்து இந்தியாவுக்கு அனுப்ப வேண்டும் என முன்னாள் மலேசியக் காவல்துறைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் இயங்கி வந்த இஸ்லாமிய ரிசர்ச் ஃபவுண்டேஷன் அமைப்பின் நிறுவனரும் மத  போதருமான ஜாகிர் நாயக் இஸ்லாமியருக்கு எதிரான வன்முறையைத் தூண்டும்படி பேசி வந்தார்.  இதற்கு அரசு நடவடிக்கை எடுக்க உள்ளதை அறிந்த ஜாகிர் நாயக் கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மலேசியாவுக்குச் சென்று நிரந்தர குடியுரிமை பெற்றுள்ளார்.   இவருக்கு வெளிநாட்டு நிதி உதவிகள் வந்ததை கண்டறிந்த இந்திய அரசு இவர் சொத்துக்களை முடக்கின.

ஜாகிர் நாயக்கை இந்தியாவுக்கு அனுப்புமாறு அரசு கோரிக்கை விடுத்துள்ளது.   இது குறித்து  முன்னாள் மலேசியக் காவல்துறை தலைவர் ஸ்ரீரகிம் நூர், “பிரதமர் மகாதிர் முகமது ஜாகிர் நாயக் கின் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்வது குறித்தும் அவர் கிரிமினல் நடவடிக்கைகளில் ஈடுபட்டது குறித்தும் விசாரணை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.   இதன்படி நாம் இந்த விசாரணை முடியும் வரை காத்திருக்க வேண்டும்.

இருப்பினும் அவர் தனது உரைகளின் மூலம் இஸ்லாமியர் அல்லாதோர் குறிப்பாக இந்துக்கள் மீது வன்முறை நடத்தும்படி பேசியதாகக் கூறப்படுகிறது.   நாம் அதனால் விசாரணை முடியும் வரை காத்திருக்க  தேவையில்லை என நான் கருதுகிறேன்.   ஜாகிர் நாயக் இந்தியவில் இவ்வாறு உரையாற்றியதற்கு போதுமான சாட்சியங்கள் உள்ளன.  எனவே அரசு ஜாகிரின் நிரந்தர குடியுரிமையை ரத்து செய்து அவரை உடனடியாக இந்தியாவுக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

அவர் தனது தாய் நாட்டில் அந்நாட்டுச் சட்டத்துக்கு எதிராக நடந்துக் கொண்டதால் அவர் தேடப்படும் குற்றவாளிகள் பட்டியலில் இடம் பெற்றுள்ளார்.  நமது நாட்டில் வெளிநாட்டவர் வந்து மதத்தின்  பெயரால் நமக்குப் பிரச்சினைகள் அளிக்கக் கூடாது.  நமக்கு இது போன்றவர்கள் தேவையா என்றால் இல்லை என நான் சொல்வேன்.   நீ விதைத்ததை நீ அறுவடை செய்வாய் என மலேசியாவில் சொல்வதைப் போல் அவர் விதைத்ததை அவர் தான் அறுவடை செய்யவேண்டும்.

இவ்வாறான ஒரு வெளிநாட்டவருக்கு எப்படி நிரந்தர குடியுரிமை வழங்கப்பட்டது என்பது குறித்து ஐயம் எழுகிறது.   ஒருவர் நமது நாட்டில் நிரந்தர குடியுரிமை பெறப் பல வருடங்கள் ஆகும் நிலையில் இவருக்கு உடனடியாக குடியுரிமை கிடைத்ததற்கு பின் ஏதோ ஒரு சக்தி உள்ளதாகத் தோன்றுகிறது.    இவ்வாறான ஒரு குற்றவாளியைக் குடியுரிமை ரத்து செய்து நாட்டை விட்டு அனுப்ப வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.

[youtube-feed feed=1]