சென்னை: பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்போருக்கான கருணை தொகை ரூ.8ஆயிரம் முதல் ரூ.24ஆயிரம் வரை வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பாழடைந்த குடியிருப்புகள் புணரமைக்கப்பட உள்ளதால்,அங்கு வசிப்போர் தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்குவதற்காக அரசு உதவி தொகை அறிவித்து உள்ளது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலம் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு வழங்கப்படும் கருணைத்தொகையை ரூ.24 ஆயிரமாக உயர்த்தி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அரசாணையில், “தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் 9,242 பாழடைந்த குடியிருப்புகளில் வசிப்பவர்களுக்கு கருணைத் தொகையாக ஒரு குடும்பத்திற்கு ரூ.8000 முதல் ரூ.24,000 வரை வழங்குவதற்கு தமிழ்நாடு அரசு கொள்கை ரீதியான நிர்வாக அனுமதியை வழங்கியுள்ளது.
இந்த தொகையான இரு கட்டமாக வழங்கப்படும் என்றும், முதல் தவணையாக ரூ.12 ஆயிரமும், இரண்டாவது தவணையாக ரூ.12ஆயிரமும் வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை இடமாறுதல் மற்றும் அடுத்தடுத்து வாடகை இடங்களில் தங்கும் போது தேவையான செலவினங்களைச் சந்திக்க அவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என தெரிவித்துள்ளது.
சென்னையில் அரசு குடியிருப்பு ஒன்று இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து, தமிழ்நாட்டில் பராமரிப்பின்றி பாழடைந்து இருக்கும் குடியிருப்புகளை கணக்கெடுத்து, அதை புணரமைக்க தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன் தொடர் நடவடிக்கையாக அங்கு வசிப்போர் தற்காலிகமாக மாற்று இடத்தில் தங்குவதற்காக அரசு உதவி தொகை அறிவித்து உள்ளது.