திருவனந்தபுரம்

ஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அளித்தது எற்புடையது அல்ல என கேரள முன்னாள் டிஜிபி சென்குமார் தெரிவித்துள்ளார்.

இஸ்ரோவில் விஞ்ஞானியாக பணி புரிந்த நம்பி நாராயணன் நெல்லை மாவட்டத்தை சேர்ந்தவர் ஆவார். கடந்த 1994 ஆம் ஆண்டு இவர் விண்வெளி ஆய்வு ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக புகார் எழுந்து நாடே பரபரப்பானது. கேரள காவல்துறையினர் இது குறித்த விசாரணையில் நம்பி நாராயணனையும் மாலத்தீவை சேர்ந்த மரியம் ரஷிதா, பவுசியா உள்ளிட்ட சிலரையும் கைது செய்தனர். அந்த விசாரணைக்குழுவில் காவல்துறை அதிகாரி சென்குமார் இடம் பெற்றிருந்தார்.

அதன் பிறகு சிபிஐக்கு மாற்றப்பட்ட இந்த வழக்கு சுமார் 24 வருடங்கள் நடந்தது. கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் நம்பி நாராயணன் குற்றமற்றவர் எனக் கூறி விடுவிக்கப்பட்டார். அத்துடன் இந்த வழக்கில் தவறாக நடந்துக் கொண்ட அதிகாரிகள் குறித்து விசாரணை செய்ய உச்சநீதிமன்றம் மூவர் குழு ஒன்றை அமைத்தது. நம்பி நாராயணன் தன்னை பொய் வழக்கில் கைது செய்த சென்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் மீது ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு தொடர்ந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

நம்பி நாராயணனுக்கு இந்த வருடம் பத்ம பூஷன் விருது வழங்கப்பட்டுள்ளது.

காவல்துறை முன்னாள் அதிகாரியும் நம்பி நாராயணனை கைது செய்தவருமான சென்குமார் இது குறித்து, “இந்த இஸ்ரோ ரகசியக் கடத்தல் வழக்கு முடிவடையாமல் உள்ளது. மூன்று பேர் குழு தனது விசாரணைஅறிக்கையை தாக்கல் செய்யவில்லை. அதற்குள் நம்பி நாராயணனுக்கு பத்மபூஷன் விருது அறிவித்தது அந்த விருதுக்கே அவமானம்.  இது ஒரு குடம் பாலில் ஒரு துளி விஷம் கலந்தது போலாகும்.” என தெரிவித்துள்ளார்.

இதற்கு நம்பி நாராயணன், “சென்குமார் கூறியது உண்மைக்கு புறம்பானது. கடத்தல் வழக்கில் இறுதி தீர்ப்பு 24 வருட விசாரணைக்குப் பின் வழங்கப்பட்டு விட்டது. தற்போதுள்ள மூவர் குழு தவறு செய்த அதிகாரிகள் மீது விசாரணை நடத்த மட்டுமே அமைக்கப்பட்டதாகும். பொய் வழக்கில் என்னை கைது செய்த அதிகாரிகள் மீது நான் ரூ.1 கோடி நஷ்ட ஈடு கேட்டு வழக்கு தொடர்ந்திருக்கிறேன். அதில் நான் சென்குமார் மீதும் குற்றம் சாட்டி உள்ளேன்.  அந்த வழக்கின் நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அவர் என் மீது பழி சொல்லி இருக்கிறார்” என பதில் அளித்துள்ளார்.