சென்னை-
“தம்பி தினகரன், நல்லவர், வல்லவர், பண்பாளர், திறமைசாலி, உழைப்பாளி..” என்றெல்லாம் புகழ்ந்து தள்ளுகிறார் ஜெயலலிதா. “மறவாதீர்.. தொப்பிச் சின்னத்தில் வாக்களியுங்கள்..” என்று ஆர்.கே. நகரில் போட்டியிடும் தினகரனுக்காக வாக்கு கேட்கிறார் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.
ஆச்சரியமாக இருக்கிறதா?
ஆமாம்.. இப்படி ஒரு வீடியோ காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது.
“ஜெயலலிதா மரணமடைந்ததால்தான் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலே நடக்க இருக்கிறது. இதில் எப்படி ஜெயலலிதா..” என்று மண்டை குழம்ப வேண்டாம்.
தினகரன் அணியினரின் கிராபிக்ஸ் வேலைதான் இது.
கடந்த 1999ம் ஆண்டு பெரியகுளம் நாடாளுமன்றத் தேர்தலில் தினகரன் போட்டியிட்டபோது, ஜெயலலிதா செய்த பிரச்சார வீடியோவை தேடிக் கண்டுபிடித்தது தினகரன் தரப்பு. அந்த வீடியோவில் இரட்டை இலை என்று ஜெயலலிதா சொல்லும் இடங்களில் எல்லாம் தொப்பி என சேர்த்திருக்கிறார்கள்.
இப்போது இந்த வீடியோ, ஆர்.கே. நகரில் பரப்பப்பட்டு வருகிறது. ஆனால் தினகரன் தரப்பு எதிர்பார்த்ததற்கு மாறாக, வேறுவிதமான ரியாக்சனை அதிமுக ஆதரவாளர்களிடம் ஏற்படுத்தி வருகிறது.
“ஜெயலலிதா பேச்சையே கோல்மால் செய்து மாத்திட்டாங்களே. இவங்களுக்கு கட்டாயமா ஓட்டு கிடையாது” என்கிறார்கள் அதிமுக ஆதரவாளர்கள்.