சண்டிகர்
முன்னாள் ராணுவ அதிகாரி விஜய் ஓபராய் என்பவர் ராணுவ வீரர்களை குப்பை அள்ளும்படி பாதுகாப்பு அமைச்சர் கூறுவதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இந்திய ராணுவத்தில் லெஃப்டினெண்ட் ஜெனரலாக பணி புரிந்தவர் விஜய் ஓபராய். இவர் 1965ல் பாகிஸ்தானுடன் நடந்த போரில் தனது வலது காலை இழந்தவர். அதற்குப் பின் போரில் காயமுற்ற ராணுவ வீரர்களுக்காக சங்கத்தின் தலைவராக இருக்கிறார். ராணுவம் பற்றிய பல செய்திக் கட்டுரைகளை எழுதி வருகிறார்.
சமீபத்தில் அவர் எழுதிய கட்டுரையில் காணப்படுவதாவது :
”தற்போது ஆட்சி செய்யும் பா ஜ க அரசு தேர்ந்தெடுத்துள்ள பாதுகாப்பு அமைச்சர் அவர் பெண் என்பதால் மட்டுமே தேர்வு செய்யப்பட்டதாக தோன்றுகிறது. அல்லது தென் இந்தியாவில் சரியும் தங்கள் இமேஜை உயர்த்த தேர்வு செய்யப்பட்டு இருக்கலாம் அமைச்சர் அடிக்கடி அர்த்தமற்ற அறிவிப்புக்கள் வெளியிடுகிறார். ராணுவத்தினரின் பணிகள் என்ன என்பதை அவர் சரியாக புரிந்துக் கொள்ளவில்லை எனவே தோன்றுகிறது. அதற்கு அவர் சமீபத்தில் வெளியிட்ட ஒரு உத்தரவே சான்று ஆகும்.
ராணுவத்தினரை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபடச் சொல்லி இருக்கிறார். அதாவது நாட்டை காக்கும் வீரர்களை குப்பை அள்ளச் சொல்லி இருக்கிறார். நமது நாட்டின் உயரமான பகுதிகளில் சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள் என்பதால் அந்த இடத்தில் உள்ள குப்பைக் கூளங்களை ராணுவத்தினர் அகற்ற வேண்டும் என்பது கேலிக்குரிய விஷயமாகும்.
பிரதமர் மோடி பாதுகாப்பு அமைச்சகம் என்பது சாதாரணமானது அல்ல என்பதை அமைச்சரை தேர்ந்தெடுக்கும் முன்பு யோசித்திருக்க வேண்டும். அவர் நிதித்துறை மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர்களால் வரும் தேர்தலில் தோற்றுவிடுவார் என எங்களைப் போல் பலரும் அச்சம் அடைந்துள்ளோம். இதற்கு முன்பு இந்தத் துறைகளில் அமைச்சராக பணி ஆற்றியவர்களின் தகுதிகளை ஆராய்ந்து அதற்கு சமமானவரை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும்.
எனக்கு பாதுகாப்பு அமைச்சர் மேல் எந்தக் கோபமும் முதலில் இல்லை. மேலும் அவர் தேர்ந்தெடுக்கப் பட்ட உடன் நானும் மகிழ்ச்சி அடைந்தேன். ஆனால் அவர் செயல்பாடுகள் மூத்த ராணுவ அதிகாரிகளுக்கு சிறிதும் திருப்தியை அளிக்கவில்லை என்றுதான் சொல்லவேண்டும். அவருடைய திறமைகளைக் கொண்டு இந்த அமைச்சகத்தை நன்கு வழி நடத்திச் செல்வார் என பலரும் நினைத்திருந்த வேளையில் அவருடைய கேலிக்கூத்தான உத்தரவுகள் மூலம் அனைவரையும் ஏமாற்றி விட்டார்.
இதற்கு முன்பு அவர் பணிபுரிந்த அமைச்சகத்தில் தனது முழுத் திறமையையும் காட்டிய அவர் தனது பாதுகாப்புத் துறை பணிகளை இன்னும் புரிந்துக் கொள்ளவே இல்லை என தோன்றுகிறது. இதற்கு முன்பும் இது போல உத்தரவுகள் பிறப்பித்த அமைச்சர்களுக்கு என்ன நேர்ந்தது என்பதையும் அவர்கள் மதிப்பிழந்ததையும் தற்போதைய அமைச்சர் புரிந்துக் கொள்ள வேண்டும்.
தூய்மை இந்தியா என்னும் திட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப் பட்டுள்ளதாக தோன்றுகிறது. வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் போடும் குப்பை கூளங்களை அகற்ற ராணுவத்தினருக்கு உத்தரவிடுவது மற்ற நாடுகளிடையே இந்தியாவின் பெருமையை குலைக்கும் செயலாகும். தயவு செய்து பாதுகாப்பு அமைச்சர் மற்றும் பிரதமர் அலுவலகத்திடம் இந்த உத்தரவை உடனே திரும்பப் பெறுமாறு வேண்டிக் கொள்கிறேன்” என தனது கட்டுரையில் விஜய் அரோரா கூறி உள்ளார்.