டில்லி
முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி டில்லிக்கு திடீரென சென்றுள்ளதால் அவர் பாஜகவில் இணையலாம் என ஊகம் கிளம்பி உள்ளது.
முந்தைய அதிமுக ஆட்சியில் பால்வளத்துறை அமைச்சராக இருந்தவர் கே.டி.ராஜேந்திர பாலாஜி. இவர் 2011 மற்றும் 2016 சட்டமன்ற தேர்தல்களில் சிவகாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த நிலையில் இந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் தொகுதி மாறி ராஜபாளையம் தொகுதியில் போட்டியிட்ட அவர் திமுகவின் தங்க பாண்டியனிடம் அவர் தோல்வி அடைந்தார்.
அதிமுக அரசில் பால்வளத்துறை அமைச்சராக இருந்த போது அதிரடியான கருத்துக்களைப் பேசி பரபரப்பை ஏற்படுத்தி வந்தார். இவரின் கருத்துக்களால் சில நேரங்களில் அதிமுக தலைமைக்கே சங்கடம் ஏற்பட்டிருக்கிறது. குறிப்பாக 2019ம் ஆண்டு ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் மோடி தான் எங்கள் டாடி என்றும், பிரதமர் மோடி இருக்கும் வரை எங்களை யாரும் மிரட்ட முடியாதுஎனப் பேசி பரபரப்பைக் கூட்டினார்.
தற்போது முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மீதான சொத்துக்குவிப்பு புகாரில் விடுபட்ட ஆவணங்களை திரட்டி வருவதாகவும், அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் உயர்நீதிமன்றத்தில் காவல்துறை சார்பில் தெரிவிக்கப்படுள்ளது.
முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திடீரென இன்று காலை 11 மணிக்கு விமானம் மூலம் டில்லி சென்றுள்ளார், அமித்ஷா உள்ளிட்ட பாரதிய ஜனதா கட்சியின் முக்கிய தலைவர்களை அவர் சந்திக்க இருப்பதாகத் தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் பாஜகவில் சேரப் போவதாகவும் பேசப்படுகிறது.
இதனிடையே, டில்லியில் பாஜக தமிழக தலைவர் அண்ணாமலை டெல்லியில் முகாமிட்டிருக்கிறார். நாளை கட்சியின் தேசிய தலைவர் நட்டாவை சந்திக்கிறார். இதனால் ராஜேந்திர பாலாஜியின் டில்லி பயணம் மேலும் சந்தேகத்தை எழுப்பியுள்ளது.