ஈரோடு: வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவன் முன்னிலை வகித்து வருகிறார். இதுவரை, 6வது சுற்று எண்ணப்பட்டு உள்ளது. இதில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ்இளங்கோவன் மற்ற கட்சி வேட்பாளர்களை விட சுமார் 29,337 வாக்குகள் பெற்று முன்னிலையில் இருந்து வருகிறார்.
நோட்டாவுக்கு 99 பேர் வாக்களித்துள்ளனர். தேர்தலில் தோற்பது உறுதியான நிலையில், அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு, வாக்கு எண்ணிக்கை மையத்தில் இருந்து வெளியேறினார்.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த மாதம் 27ஆம் தேதி நடந்து முடிந்தது. பதிவான வாக்குகள் இன்று காலை 8மணி முதல் எண்ணப்பட்டு வருகிறது. இந்த இடைத்தேர்தலில் மொத்தம் 397 தபால் ஓட்டுக்கள் பதிவாகி இருந்தது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில், அதைத் தொடர்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் திறக்கப்பட்டு வாக்குகள் எண்ணப்பட்டு வருகிறது.
வாக்கு எண்ணிக்கையையொட்டி, அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. திமுக அதிமுக கட்சி தொண்டர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்தை சுற்றி குவிந்துள்ளனர்.
இதுவரை 6 சுற்று வாக்குகள் எண்ணப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் இவிகேஎஸ் இளங்கோவன் 46,175 வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார். இவர் எதிர்க்கட்சி வேட்பாளரான அதிமுகவின் கே.எஸ்.தென்னரசுவைவிட 29,337 ஆயிரத்துக்கும் அதிக வாக்குகள் பெற்று முன்னிலையில் உள்ளார்.
அதிமுக வேட்பாளர் கே.எஸ்.தென்னரசு 16,838 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மேனகா 3076 வாக்குகளும், தேமுதிக வேட்பாளர் ஆனந்த் 439 வாக்குகளும் பெற்றுள்ளனர். இதுவரை எண்ணப்பட்ட வாக்குகளில் நோட்டாவுக்கு 99 வாக்குகள் கிடைத்துள்ளன.