சென்னை: ஆளுநர் ஆர்.என்.ரவி தமிழ்நாட்டில் இருந்து ரயில் ஏறும் நேரம் வந்துவிட்டது என்றும், தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி போராட்டத்தில் பேசிய முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் கூறினார்.
தமிழக ஆளுந;u ஆர்.என.ரவி பொறுப்பேற்றது முதல் தமிழக அரசுக்கும் ஆளுநருக்கும் இடையேயான கருத்து மோதல் அதிகரித்து வருகிறது. தமிழக அரசின் நீட் விலக்கு உள்பட பல்வேறு மசோதாக்களுக்கு ஆளுநர் அனுமதி மறுத்து வருகிறார். இதனால், மாநில அரசு ஆளுநரை புறக்கணித்து வருகிறது. இதையடுத்து, தமிழக அரசுக்கு எதிராக செயல்படும் ஆளுநருக்கு எதிராக இன்று மாலை தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற்றது.
சைதாப்பேட்டை ராஜீவ் காந்தி சிலை அருகே நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் கே.எஸ்.அழகிரி, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்பட காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய ஈவிகேஎஸ் இளங்கோவன், ஆளுநரை ஆளுநர் என்று சொல்லாமல் வெறும் ரவி என்றே கூறலாம், அவருக்கு மரியாதை தர வேண்டிய அவசியம் கிடையாது. ரவி இதற்கு முன்பு பணிசெய்த நாகலாந்தில் பாம்பு கறி, நாய் கறி சாப்பிடுவார்கள். ஆனால் தமிழ்நாட்டில் இருப்பவர்கள் நெல் அரிசி, சோறு சாப்பிடுப வர்கள். கொஞ்சம் உரசினாலும் தீ பற்றிக்கொள்ளும்.
இப்போது கூட செல்வப்பெருந்தகையிடம் சட்டமன்றத்தில் ஜெயலலிதா பற்றி கூறும்போது கோமளவல்லி என குறிப்பிட்டு பேசியிருக்கலாம் என கூறினேன். அமித்ஷா பேச்சைக் கேட்டுக் கொண்டு ரவி எருமை மாடு போல அசைவற்று இருக்கிறார். தமிழர்கள் நாகரிகமாக இருக்கிறார்கள் என்று ரவி நினைக்கிறார். தமிழர்களைப் பற்றி தெரிந்துகொள்ள டெல்லியில் பழைய தலைவர்களை கேட்டுப்பாருங்கள். தேவைப்பட்டால் தமிழர்கள் அநாகரீகமாகவும் நடந்து கொள்வார்கள்.
தமிழக மக்கள் நினைத்தால் ஒரு நிமிடத்தில் ரவி தூக்கி எறியப்படுவார். தபால்காரன் வேலையை செய்பவர்தான் ஆளுநர் ரவி, ரவி வீடு போய் சேர வேண்டிய நேரம் வந்துவிட்டது. ரவியை ஒழிக்க நினைத்தால் அதை விரைந்து செய்ய முடியும், ஆனால் ஸ்டாலின் ஆட்சிக்கு கெட்ட பெயர் வந்து விடக்கூடாது என்பதால் பொறுமையாக இருக்கிறோம்.
ரவி அவர்களே குழந்தை குடும்பத்தோடு இருக்கிறீர்கள், ஒருவாரத்திற்குள் நீட் மசோதாவை குடியரசு தலைவருக்கு அனுப்ப வில்லை என்றால் காங்கிரஸ் போராட்டம் தீவிரமாகும். ரவி உங்களை ரயிலில் டெல்லி அனுப்பி வைத்து விடுவோம்.
இவ்வாறு அவர் பேசினார்.