சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவி உள்ளது.
இது குறித்து காங்கிரஸ் வட்டாரத்தில் கூறப்படுவதாவது:
“நடந்து முடிந்த சட்டசபை தேர்தலின் போது, வேட்பாளர்களை தேர்ந்தெடுப்பது குறித்து தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கும் இதர மூத்த தலைவர்களான சிதம்பரம், தங்கபாலு உள்ளிட்ட பிறருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
articleY21XIEVKS-Elangovan
அரவக்குறிச்சி தொகுதியை வேண்டுமென்றே தி.மு.க.வுக்கு விட்டுக்கொடுத்துவிட்டார் என்று ஜோதிமணியும் புகார் கூறினார்.
இதையடுத்து ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மீது இதர மூத்த தலைவர்கள் காங்கிரஸ் மேலிடத்தில் புகார் கொடுத்தார்கள்.
தேர்தல் முடிந்தபிறகு, காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு தோற்ற  விஷ்ணுபிரசாத் உட்பட சிலர், “ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை” என்று புகார் கூறினார்கள். இதையடுத்து அவரை கட்சியில் இருந்து நீக்குவதாக இளங்கோவன் அறித்தார். மேலும் சிலரை நீக்குவதாகவும் அவர் அறிவித்தார்.
இந்த சமயத்திலும் இளங்கோவன் மீது மேலிடத்தில் பலர் புகார் கொடுத்தார்கள்.
இதற்கிடையே டில்லி சென்ற இளங்கோவன், அகில இந்திய தலைவர் சோனியா காந்தி, துணைத்தலைவர் ராகுல் ஆகியோரை சந்திக்க முயன்றார். ஆனால் இருவருமே இளங்கோவனை சந்திக்கவில்லை.
இதனால் வருத்தத்துடன் சென்னை திரும்பிய இளங்கோவன், சமீப நாட்களாக நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளவில்லை. பாண்டிச்சேரி முதல்வர் நாராயணசாமி, சென்னை சத்யமூர்த்தி பவனுக்கு வந்தபோது மட்டும் அந்த நிகழ்ச்சியில் இளங்கோவன் கலந்துகொண்டார்.
இந்த நிலையில், இளங்கோவன் நடவடிக்கைகள் குறித்து டில்லி மேலிடம் அதிருப்தி தெரிவித்ததாகவும், அதை டில்லி தலைவர்கள் மூலம் தெரிவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இந்த சூழலில்தான், இளங்கோவன் தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டதாக தகவல் பரவியிருக்கிறது.
இது குறித்து காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் கோபண்ணா, “சட்டசபை தேர்தலுக்கு பொறுப்பேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக இரண்டு நாட்களுக்கு முன்பே இளங்கோவன் மேலிடத்துக்கு கடிதம் அனுப்பிவிட்டார்” என்று தெரிவித்தார்.
ராஜினாமா கடிதம் ஏற்கப்படுமா என்பதை உறுதியாகச் சொல்ல முடியாது. ஏற்கெனவே ஒரு முறை தங்கபாலு ராஜினாமா கடிதம் கொடுத்த பிறகு, ஆறு மாதங்களுக்கு மேல் அவரே தலைவர் பொறுப்பில் இருந்தார்.
ஆகவே இளங்கோவன் ராஜினாமா குறித்து உறுதியான தகவல் ஏதும் இதுவரை வரவில்லை” என்று காங்கிரஸ் கட்சி வட்டாரத்தில் பேசப்படுகிறது.