சென்னை: “எல்லார்க்கும் எல்லாம்” என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயர உறுதி ஏற்போம் என  பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் பிறந்தநாளையொட்டி, சென்னை அண்ணா நகரில் உள்ள பேராசிரியர் அவர்களின் இல்லத்திற்கு முதலமைச்சர் மு..க.ஸ்டாலின் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, மாணவ, மாணவியர்களுக்கு கல்வி உதவித்தொகை, கல்வி உபகரணங்களை வழங்கினார்

முன்னாள் கல்வி அமைச்சர் அமைச்சர் அன்பழகனின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை டிபிஐ வளாகத்தில் அன்பழகன் பெயரில் அலங்கார வளைவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். டிபிஐ வளாகத்துக்கு முன்னாள் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் வளாகம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதையடுத்து, மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,  எல்லார்க்கும்  எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி  இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம் என  தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்; இனமானப் பேராசிரியர் அன்பழகனார் அவர்களின் நூற்றாண்டு விழா நிறைவு பெற்று, 101-ஆவது பிறந்தநாள் இன்று! இனமானமும், தன்மானமும், மொழி உணர்வும், இன உணர்வும் பிறந்த நாள் இன்று!

ஒன்பது முறை சட்டமன்ற உறுப்பினர், 1967-1971 வரையில் திருச்செங்கோடு மக்களவைத் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர், இருமுறை கல்வித் துறை அமைச்சர், மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர், சமூகநலத்துறை அமைச்சர், முத்தமிழறிஞர் கலைஞர் ஐந்தாம் முறையாக முதலமைச்சர் பொறுப்பேற்ற 2006-2011 காலத்தில் நிதியமைச்சர், 1977-ஆம் ஆண்டு தொடங்கி 2020 வரையிலும் கழகத்தின் பொதுச் செயலாளர் எனத் தமிழ்நாட்டின் அரசியலிலும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வரலாற்றிலும் எவராலும் அழிக்க முடியாத் தடத்தை விட்டுச் சென்றுள்ளார் பேராசிரியர்.

சுயமரியாதை இயக்க காலந்தொட்டு – இன்றைய திராவிட மாடல் ஆட்சிக்காலம் வரையில் தனது  உரையால் வழிநடத்திக் கொண்டு இருந்த பேராசிரியப் பெருந்தகை அவர்கள் இப்போதும் உணர்வால் வழிநடத்திக் கொண்டு இருக்கிறார்கள். பகுத்தறிவுப் பகவலன் தந்தை பெரியார், காஞ்சி தந்த வள்ளுவன் பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர் ஆகியோரைப் போலவே இனமானப் பேராசிரியர் அவர்களின் சிந்தனையும் தொண்டும் கடந்த முக்கால் நூற்றாண்டு காலமாகத் தமிழகத்துக்கு முழுப்பயனைக் கொடுத்த மூலக்கருத்தியல் சிகரம் ஆகும். திராவிடவியல் கோட்பாட்டுக்கு விளக்கவுரை தீட்டியவர் மட்டுமல்ல, விளக்காகவும் இருந்தவர் பேராசிரியர்.

 

அவர் காட்டிய இனமான ஒளியில் நமது பயணம் தொடர்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் நிலப்பரப்பில் தமிழன் யாருக்கும் தாழ்ந்தவனல்ல என்பதை மெய்ப்பிக்கும் தொண்டே தனது பணி என்று சொன்னவர் பேராசிரியர் அவர்கள். அத்தகைய இலக்கைக் கொண்டதாகவே திராவிட மாடல் ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர்களில் முதலிடம், மாநிலங்களில் தமிழ்நாடு முதலிடம் என்ற இலக்கைத் திராவிட முன்னேற்றக் கழக அரசு அடைந்துள்ளது என்றால் இதுதான் பேராசிரியர் காணவிரும்பிய கனவுத் தமிழ்நாடு.

நீதிக்கட்சி காலத்து சமூகநீதி – வகுப்புரிமை – ஆகியவை எந்தக் காலத்திலும் எந்தச் சூழலிலும் பட்டுப் போய்விட அனுமதிக்கக் கூடாது என்பதைப் பேராசிரியர் அவர்கள் மேடைதோறும் வலியுறுத்திக் கொண்டு இருந்தார்கள். சமூகநீதிக் கருத்தியல், வகுப்புரிமை இன்று இந்தியா முழுமைக்கும் ஒலிக்கும் சொல்லாக – யார் நினைத்தாலும் அதில் கை வைக்க முடியாத கருத்தியலாக இருக்கிறது. மாநில சுயாட்சி – மாநில உரிமைகள் குறித்து இந்திய நாடாளுமன்றத்தில் ஓங்கிக் குரல் கொடுத்தவர் பேராசிரியர் அவர்கள். இன்று இந்திய ஒன்றியத்தின் அனைத்து மாநிலங்களிலும் மாநில சுயாட்சிக் குரல்கள் கேட்கத் தொடங்கி இருக்கிறது.அகில இந்தியக் கட்சிகளே மாநில சுயாட்சிக் கொள்கைகளைப் பேசத் தொடங்கி இருக்கும் காட்சியை இப்போது பார்க்கிறோம். நூற்றாண்டு விழா காணும் காலத்தில் பேராசிரியரின் பெரும்பாலான கனவுகள், பெரும்பாலானவர்களின் கனவுகளாக விரிவடைந்து வருகின்றன. ”ஒவ்வொரு நாளும் உறங்கப்போகுமுன் தமிழின மீட்சிக்கு இன்று நாம் என்ன செய்தோம் என்பதை எண்ணிப் பாரீர்!’ என்று வேண்டுகோள் வைத்தார் பேராசிரியர் அவர்கள். இதனை மனதில் நிறுத்தி ஒவ்வொருவரும்  செயல்பட வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன். ‘எல்லார்க்கும் எல்லாம்’ என்ற இலக்கை நோக்கி இவ்வையகம் உயரப் பேராசிரியரின் 101-ஆவது பிறந்தநாளில் உறுதி ஏற்போம்.

இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.