திருவனந்தபுரம்:

கொரோனா அச்சுறுத்தலால் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ள நிலையில் மக்களின் வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது.  இதன் காரணமாக,  கேரளா முழுவதும் அனைவருக்கும், எந்தவித வேறுபாடும் பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரே‌ஷன் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும் என்று முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்து உள்ளார்.

உலக நாடுகளை பீதிக்குள்ளாக்கி வரும் கொரோனா வைரஸ், இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இதை தடுக்கும் வகையில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. மக்கள் கூட்டம் கூடுவதை தடுக்க கேரள அரசு பொதுமக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. திருமணங்கள் நடத்த தடை, பொது இடங்களில், வியாபார தலங்களில் அதிகமானோர் திரளக்கூடாது என்று கூறியது. அரசின் உத்தரவை தொடர்ந்து சுற்றுலா தலங்கள், மால்கள், விற்பனை நிறுவனங்கள், சினிமா தியேட்டர்கள், திருமண மண்டபங்கள் அனைத்தும் மூடப்பட்டன. இதனால் கேரளாவின் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

இந்தியாவில் இதுவரை கொரோனா பாதிப்பு 171 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 44 பெருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.  2வது இடத்தில் கேரள மாநிலம் உள்ளது. இங்கு 28 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த நிலையில், மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் வழங்குவது குறித்து, முதல்வர் தலைமையில் உயர்அதிகாரிகள் கூட்டம் நடைபெற்றது.இதில் கொரோனா பாதிப்பில் இருந்து கேரள மக்களை மீட்பு குறித்து ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தொழில்துறை, சினிமாத்துறை, போக்குவரத்து துறையினருக்கும், ஏழை மக்களுக்கும் பல்வேறு சலுகைகள் அளிக்க முடிவு செய்யப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர்  பினராயி  விஜயன்,

கேரளாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியை சமாளிக்க ரூ.20 ஆயிரம் கோடிக்கு சலுகை திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. அதன்படி, கொரோனா வைரஸ் பாதிப்பால் வருமானம் இழந்து நிற்கும் மக்களுக்கு கடன் வழங்க ரூ.2 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. குடும்பஸ்ரீ அமைப்புகள் மூலம் இக்கடன் வழங்கப்படும்.

மேலும்,  ரூ.1000 ஆயிரம் கோடிக்கு கிராமிய தொழில் உறுதி திட்டம் நிறைவேற்றப்படும். சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்தை முன் கூட்டியே வழங்க முடிவு செய்யப்பட் டுள்ளது. அதன்படி, மார்ச் மற்றும் ஏப்ரல் ஆகிய 2 மாத ஓய்வூதியம் சேர்த்து வழங்கப்படும். இதற்காக ரூ.1,320 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 50 லட்சம் பேர் பலன் அடைவார்கள்.

கேரளா முழுவதும் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் என்ற வேறுபாடு பார்க்காமல் அனைவருக்கும் ஒரு மாதத்திற்கு இலவச ரே‌ஷன் மற்றும் உணவு தானியங்கள் வழங்கப்படும்.

வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் மற்றும் அந்தியோதியா பிரிவினர் தவிர மற்றவர்களுக்கு 10 கிலோ அரிசி வழங்கப்படும். இதற்காக ரூ.1000 கோடி ஒதுக்கப்படும்.

கேரளாவில் சலுகை விலையில் மதிய உணவு வழங்க ஆயிரம் உணவகங்கள் வருகிற செப்டம்பர் மாதம் திறக்கப்படும் என்று அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது.

கொரோனா பாதிப்பு காரணமாக இந்த திட்டம் உடனடியாக செயல்பாட்டிற்கு வருகிறது. இந்த உணவகங்களில் ரூ.20-க்கு மதிய உணவு வழங்கப்படும்.

கேரளாவில் அவசர சுகாதார திட்டங்களுக்கு ரூ.500 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. தனிநபர் மற்றும் நிறுவனங்களுக்கு அரசு வழங்க வேண்டிய நிலுவை தொகைகள் அனைத்தும் ஏப்ரல் மாதத்தில் வழங்கப்பட்டு விடும்.

ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு தகுதி சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தில் சலுகை வழங்கப்படும். பஸ்களுக்கும் வரிச்சலுகை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மின்சாரம், குடிநீர் கட்டணத்தை அபராதம் இல்லாமல் கட்ட ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்படுகிறது.

சினிமா தியேட்டர்களுக்கான கேளிக்கை வரியையும் சலுகை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.