சென்னை: இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தாம்பரத்தில் தனியார் மருத்துவமனையை திறந்து வைத்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் பின்னர் செய்தியாளர்களை சந்திதார். அப்போது, பருவமழை தொடங்கி உள்ளதால், மழை மற்றும் நீர் தேங்குவதால் கொசு உற்பத்தி அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. அதனால்  டெங்கு போன்ற நோய்கள் பரவாமல் தடுக்க அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

தமிழ்நாட்டில் கொரோனா கட்டுக்குள் உள்ளது. அதனால்,  மக்கள் கொரனா தொற்றில் இருந்து விடுபட்டு விட்டோம் என்று எண்ணாமல், இன்னும் ஓராண்டு காலமாவது கொரோனா விதிமுறைகளை பின்பற்ற வேண்டும், அலட்சியம் வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தவர், தமிழ்நாட்டில் இதுவரை நடத்தப்பட்ட மெகா தடுப்பூசி முகாம் மூலம்  1.33 கோடி பேர் பயனடைந்துள்ளனர். இந்தியாவிலேயே எங்கும் இல்லாத அளவிற்கு 50 ஆயிரம் தடுப்பூசி முகாம்கள் மூலம் 23 லட்சத்து 27 ஆயிரத்து 906 பேருக்கு தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது என்றும், தற்போது 44 லட்சம் டோஸ் கொரோனா தடுப்பூசிகள் கையிருப்பு உள்ளன என்றும்  மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர்  தெரிவித்தார்.