கட்சிப்பாகுபாடின்றி அனைவரும் ஒன்றிணைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபடவேண்டும் என்று முன்னாள் ரயில்வே அமைச்சரும் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன கார்கே வேண்டுகோள் வைத்துள்ளார்.

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் நடைபெற்ற கோர ரயில் விபத்தில் 280 பேருக்கு மேற்பட்டோர் மரணமடைந்துள்ளனர். 900 க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனையில் உயிருக்கு போராடி வருகின்றனர்.

ரயில்களுக்கு புதுப்புது பெயர்களை வைத்தும் அவற்றின் வடிவத்தை மாற்றியும் கட்டண உயர்வு ஒன்றையே நோக்கமாக வைத்து அவற்றுக்கு பச்சைக் கொடி காட்டி வரும் நிலையில், ரயில்வே துறை நவீனமயமாகி விட்டதாக கூறுவது ஜோடிக்கப்பட்ட கற்பனை என்பது இந்த ரயில் விபத்து மூலம் தெரியவந்திருக்கிறது.

இந்த நிலையில் ஒடிசா மாநிலத்தில் நடைபெற்ற ரயில் விபத்து தொடர்பாக பிரதமர் மற்றும் ரயில்வே அமைச்சர் ஆகியோரிடம் எனக்கு பல்வேறு கேள்விகள் இருக்கிறது என்று மல்லிகார்ஜுன கார்கே கூறியுள்ளார்.

இருந்தபோதும், விபத்தில் சிக்கி போராடி வரும் பயணிகளை மீட்பதும் மருத்துவ உதவி செய்வதும் தலையாய கடமையாக இருப்பதை அடுத்து பல்வேறு கட்சியினரும் ஒன்றிணைந்து செயல்படவேண்டியது இப்போது அவசியம் என்று கூறியுள்ளார்.