புதுடெல்லி:
18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கொரோனா வைரசை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து தமிழக ஆளுநருடன் தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், காவல்துறை டிஜிபி திரிபாதி ஆகியோர் பங்கேற்றனர்.

இந்நிலையில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனாவை கட்டுப்படுத்த பாடுபட்டு வரும் மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். பொதுமக்கள் அனைவரும் மத்திய, மாநில அரசுகளின் கொரோனா நெறிமுறைகளை பின்பற்றி நடக்க வேண்டும் என்றும், அரசு, தனியார் மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன், உயிர்காக்கும் மருந்துகளை போதுமான அளவு இருப்பு வைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். தமிழகத்தில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ள முன்வர வேண்டும். 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போட சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட வேண்டும் என்றும், கொரோனா பரிசோதனை, மருத்துவமனைகளில் படுக்கை வசதி ஆகியவற்றை அதிகரிக்க வேண்டும் என்றும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அறிவுறுத்தி உள்ளார்.