யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்கும் சுதந்திரம் அனைவருக்கும் உள்ளது. ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது.

ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை என்று ஒரே பாலின திருமணம் குறித்த வழக்கில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து தெரிவித்துள்ளார்.

இயற்கைக்கு மாறாக ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் திருமணம் செய்வது அதிகரித்து வரும் நிலையில் LGBTQ எனும் ஓரினச் சேர்க்கையாளர்கள் தங்களுக்கான உரிமைகள் தொடர்பாக தொடர்ந்து குரல் எழுப்பி வருகின்றனர்.

ஓரினச் சேர்க்கை உறவுகள் தவறு இல்லை என்று 2018-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை அடுத்து நாடுமுழுவதும் பல்வேறு மாநிலங்களில் உள்ள நீதிமன்றங்களில் ஒரே பாலின திருமணங்களை அங்கீகரிக்கக் கோரி வழக்குகள் தொடரப்பட்டன.

இந்த வழக்குகள் அரசியல்சாசன சட்டவிதிகள் தொடர்பானவை என்பதால் இவை அனைத்தும் உச்சநீதிமன்ற அரசியல் சாசன பெஞ்சுக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் சஞ்சய்கிஷன் கவுல், ரவீந்திர பட், ஹூமா கோக்லி, நரசிம்மா உள்ளிட்ட 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் நேற்று தீர்ப்பு வழங்கியது.

இதில் பெரும்பான்மையான நீதிபதிகள், ஒரே பாலின திருமணத்தை அங்கீகரிக்க முடியாது என்றும் ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுத்து வளர்க்க முடியாது என்று தீர்பளித்தனர்.

இதனைத் தொடர்ந்து 3:2 என்ற விகிதத்தில் பெரும்பான்மையான நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில் ஒரே பாலின திருமணத்திற்கு அங்கீகாரம் வழங்க மறுத்துவிட்டது.

இந்த வழக்கில் தலைமை நீதிபதி சந்திரசூட் தனது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளதாவது :

“நீதிமன்றத்தால் ஒரு சட்டத்தை உருவாக்க முடியாது. ஆனால் சட்டத்தின் ஷரத்துக்களை கையாள முடியும். 200 ஆண்டுகளுக்கு முன்பு முன்னோர்களால் ஏற்க முடியாத பல விஷயங்கள் இப்போது ஏற்கக் கூடியதாக மாறி இருக்கிறது.

சதி, குழந்தை திருமணங்கள் போன்ற முன்பு ஏற்கப்பட்ட விஷயங்கள். இன்று மறுக்கப்படுகின்றன. ஒரே பாலின உறவு என்பது நகர்ப்புறத்தை சேர்ந்தது என்ற கருத்து ஏற்புடையது அல்ல. சட்டத்தை மறுஆய்வு செய்யும் அதிகாரம் நீதித்துறைக்கு இருக்கிறது.

ஒரே பாலின விவகாரத்தில் சுப்ரீம் கோர்ட்டு தலையிடக்கூடாது என்று மத்திய அரசு தனது நிலைப்பாடாக கூறியது.

திருமணம் தொடர்பான விவகாரத்தில் புதிய சட்டத்தை உருவாக்க பாராளுமன்றத்தையோ, சட்டமன்றங்களையோ கட்டாயப்படுத்த முடியாது. சிறப்பு திருமண சட்டத்தை அரசியல் சாசனத்துக்கு எதிரானதாக கருதினால் ஒரு முற்போக்கான சட்டத்தை இழக்க நேரிடும். சிறப்பு திருமண சட்டத்தின் கீழ் ஒரே பாலின திருமணங்களுக்கான சட்ட உரிமையை நீதிமன்றங்கள் தானாக சேர்க்க முடியாது.

சிறப்பு திருமண சட்டத்தில் மாற்றம் செய்ய வேண்டுமா? என்பதை பாராளுமன்றம்தான் முடிவு செய்ய வேண்டும். திருமணம் என்பது நிலையானது, மாறாதது என்று சொல்வது தவறான விஷயம். சிறப்பு திருமண சட்டத்தை ரத்து செய்தால் நாட்டை சுதந்திரத்துக்கு முந்தைய காலத்திற்கு கொண்டு செல்லும்.

வாழ்க்கை துணையை தேர்ந்தெடுப்பது என்பது ஒருவரின் வாழ்க்கை பாதையை தேர்ந்தெடுப்பது போன்றது. அரசியல் சாசன பிரிவு 21-ன் கீழ் சுதந்திரமாக வாழும் உரிமை, வாழ்க்கைத் துணையை தேர்ந்தெடுக்கும் உரிமை அனைவருக்கும் உள்ளது.

ஒரே பாலின ஜோடிகளால் குழந்தைகளை சரியான முறையில் வளர்க்க முடியாது என்பதற்கான ஆதாரப்பூர்வ தரவுகள் இல்லை. குழந்தை தத்தெடுப்பு ஒழுங்கு முறை தொடர்பான மத்திய அரசின் சுற்றறிக்கையில் ஒரே பாலினத்தவரை தவிர்த்தது அரசியலமைப்புக்கு எதிரானது.

ஒரே பாலின ஜோடிகள் குறித்த விழிப்புணர்வை பொதுமக்களுக்கு ஏற்படுத்த வேண்டும். ஒரே பாலின ஜோடிகள் குழந்தைகளை தத்தெடுப்பதில் மத்திய-மாநில அரசுகள் பாகுபாடு காட்டக் கூடாது. ஒரே பாலின நபர்களை, பிறந்த குடும்பத்துக்கு திரும்புமாறு போலீசார் கட்டாயப்படுத்தக் கூடாது.

ஒரே பாலின ஜோடிகள் யாருடன் சேர்ந்து வாழ வேண்டும் என்பதை முடிவு எடுக்க அவர்களுக்கு சுதந்திரம் உள்ளது.

திருமணம் செய்யாத ஜோடிகள், ஒரே பாலின ஜோடிகள் குழந்தையை தத்தெடுக்க முடியும்.

ஒரே பாலின ஜோடிகளுக்கான ரேஷன் அட்டை உள்ளிட்ட சலுகைகளை வழங்குவது குறித்து அரசு முடிவு எடுக்க வேண்டும். ஒருவரின் உரிமை என்பது அவர்களின் பாலினம் சார்ந்து மறுக்கப்படக் கூடாது.”

என்று தனது தீர்ப்பில் கூறியுள்ளார்.