உயர்ந்த மலைப்பகுதிகளில் கொட்டும் பனியிலும், சமவெளிகளில் கொளுத்தும் வெயிலிலும் வேட்பாளர்கள் பிரச்சாரம் செய்து கொண்டிருக்கிறார்கள்.
அவர்களுக்கு மாரடைப்பு ஏற்படுத்தும் வகையில் ஒரு புள்ளி விவரம் அண்மையில் வெளியாகி யுள்ளது.
கடந்த 30 ஆண்டுகளாக தமிழ்நாட்டில் ஒவ்வொரு தேர்தலிலும் ஒரு கோடி பேருக்கு மேல் வாக்களிப்பதில்லை.
‘ஒரு விரல் புரட்சி’க்கு தேர்தல் ஆணையம், சமூக ஆர்வலர்கள் என பல்வேறு தரப்பினர் கூக்குரல் எழுப்பி வந்தாலும் ஒரு கோடி பேர் இதனை காது கொடுத்து கேட்பதில்லை.
கடந்த 2014 ஆம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் சுமார் ஒரு கோடியே 44 லட்சத்து 70 ஆயிரம் பேர் வாக்களிக்க வில்லை.2016 ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் சுமார் ஒரு கோடியே 45 லட்சத்து 56 ஆயிரம் பேர் வாக்களிக்க வில்லை.
வாக்குச்சாவடி பக்கம் அதிகமாக நகரத்து ஜனங்கள்-குறிப்பாக படித்தவர்கள் எட்டிப்பார்ப்பதில்லை. ஆனால் கிராமத்து ஆட்கள் ஓட்டுப்போட மறப்பதில்லை.
கியூவில் நின்று ஓட்டளிப்பதை மெத்த படித்தவர்கள் சலிப்பாக கருதுவதே- வாக்கு எண்ணிக்கை குறைவுக்கு காரணம் என்று அந்த புள்ளி விவரத்தில் தெரிய வந்துள்ளது.
‘ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலை இல்லை.’’ என்று கருதும் வாக்காளர்கள் ஆண்டுக்கு ஆண்டு அதிகரித்துக்கொண்டே செல்வதாக அந்த புள்ளி விவரம் தெரிவிக்கிறது.
மக்களவை மற்றும் சட்டசபை தேர்தலுடன் ஒப்பிடும் போது- உள்ளாட்சி தேர்தலில் அதிக அளவில் ஓட்டுகள் பதிவாகிறது என்பது சந்தோசமான விஷயம்..
—பாப்பாங்குளம் பாரதி