சென்னை

கொரோனா வராமல் தடுக்க முகக் கவசம் மிகவும் அவசியமாகும் என கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் சென்னையில் மிகவும் அதிக அளவில் கொரோனா தொற்று உள்ளது. இதில் ராயபுரம் பகுதியில் பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.  இந்தப் பகுதியில் சென்னை கொரோனா தடுப்புப் பணி சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் பார்வை இட்டார்.  அதன் பிறகு அவர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.

அப்போது ராதாகிருஷ்ணன், “ கொரோனா தொற்று தடுப்புப் பணிக்கு பொது மக்கள் ஒத்துழைப்பு அவசியம் ஆகும்   இதற்காக அவசியம் முகக் கவசம் அணிய வேண்டும்.  முகக் கவசம் இல்லாவிட்டால் துணியை முகக் கவசம் போலச் சுற்றிக் கொண்டு பயன்படுத்தலாம்.

ஒரு சிலர் பேசும் போது முகக் கவசத்தைக் கீழே இறக்கி விட்டுப் பேசுகின்றனர். இது தவறான செயலாகும்.   பேசும் போது கூட அதிகாரிகள் உள்ளிட்ட யாராக இருப்பினும் அவசியம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும்.    முகக் கவசத்தைக் கீழிறக்கிப் பேசுவதை யாரும்  பின்பற்ற வேண்டாம்.

யாராக இருப்பினும் கொரோனா நம்மைத் தாக்காது என அலட்சியத்துடன் இருக்கக் கூடாது.  தன்னார்வலர்கள் உள்ளிட்ட அனைவரும் தாமாகவே முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துக் கொள்ள வேண்டும்.  இந்த பரிசோதனையை 10 நாட்களுக்கு ஒரு முறை அவசியம் செய்துக் கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.