இந்தியாவில் என்னுடைய சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் தான் முதன் முதலில் அமைக்கப்பட்டுள்ளது என்று வி.பி. சிங்கின் பேத்தி தெரிவித்துள்ளார்.
சமூக நீதி காவலரான வி.பி.சிங்கிற்கு சென்னையில் சிலை அமைக்கப்படும் என்று ஏப்ரல் மாதம் தமிழக சட்டமன்றத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார்.
இதனையடுத்து வி.பி.சிங் நினைவு நாளான இன்று சென்னை மாநிலக் கல்லூரி வாளகத்தில் அவரது முழு உருவச் சிலை திறக்கப்பட்டது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் சிலையைத் திறந்து வைத்தார். உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் வி.பி. சிங்கின் மனைவி சீதா குமாரி மகன் அபய் சிங் உள்ளிட்ட அவரது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.
பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு ஒதுக்கீடு வழங்குவதற்காக அமைக்கப்பட்ட மண்டல் கமிஷன் பரிந்துரையை ஏற்று அரசு பணியிடங்களில் 27 சதவீத இடஒதுக்கீட்டை வழங்கும் உத்தரவை செயல்படுத்திய முன்னாள் பிரதமர் வி.பி. சிங், காவிரி நதி நீர் பிரச்சினைக்கு தீர்ப்பாயத்தை அமைத்தார்.
இடஒதுக்கீடு மற்றும் காவிரி பிரச்சனைக்கு தீர்வு மூலம் தமிழக மக்கள் மனதில் இடம்பிடித்த வி.பி. சிங்கை நினைவு கூறும் வகையில் தமிழக அரசு அவருக்கு சிலை அமைத்துள்ளது.
இதுகுறித்து கூறிய வி.பி. சிங்கின் பேத்தி “சொந்த மாநிலமான உத்தர பிரதேசத்தில் கூட என்னுடைய தாத்தாவிற்கு சிலை அமைக்கப்படவில்லை தமிழ்நாட்டில் முதன் முதலாக சிலை அமைக்கப்பட்டுள்ளது எங்களுக்கு மிகவும் பெருமிதமாக இருக்கிறது” என்று கூறியுள்ளார்.