இஸ்லாமாபாத்
கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட பாகிஸ்தான் அதிபர் ஆரிஃப் ஆல்வி கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.
உலகெங்கும் கொரோனா பரவல் இரண்டாம் அலை தீவிரம் அடைந்துள்ளது. பல உலக நாடுகளையும் பாதித்து வரும் கொரோனாவால் பாகிஸ்தானில் இதுவரை 6.59 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு 14 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர்.
பாகிஸ்தானில் தற்போது கொரோனா தடுப்பூசி போடும் பணி நடந்து வருகிறது. பாகிஸ்தான் அதிபர் டாக்டர் ஆரிஃப் ஆல்வி ஏற்கனவே கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக் கொண்டுள்ளார். அவருக்கு இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போடப்பட உள்ளது.
இந்நிலையில் அவருக்கு தற்போது கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இது குறித்து அவர் டிவிட்டரில், “எனக்குச் சோதனையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அல்லா கொரோனாவால் பாதிக்கப்பட்ட அனைவருக்கும் இரக்கம் காட்ட வேண்டும்.
நான் ஏற்கனவே முதல் டோஸ் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளேன். இன்னும் ஒரு வாரத்தில் இரண்டாம் டோஸ் தடுப்பூசி போட உள்ளேன். அதற்குப் பிறகு தான் முழுமையான எதிர்ப்புச் சக்தி கிடைக்கும். அனைவரும் தொடர்ந்து கவனமாக இருக்கவும்” எனப் பதிந்துள்ளார்.