சென்னை:
மிழ்நாட்டில் இருந்து யாரும் பீகாருக்கு வேலை தேடிச் செல்வதில்லை. பீகாரில் இருந்து தான் பல பேர் இங்கு வேலை தேடி வருகிறார்கள். ஆளுநரும் கூட பீகாரில் இருந்து தான் வந்துள்ளார் என அமைச்சர் எ.வ.வேலு விமர்சித்துள்ளார்.

கலைஞர் நூற்றாண்டு தின பொதுக்கூட்டம் நேற்றுஇரவு கும்பகோணத்தில் நடைபெற்றது. இதில் மாநில நெடுஞ்சாலை துறை அமைச்சர் எ.வ. வேலு கலந்து கொண்டார். அப்போது, அவர் திமுக அரசின் சாதனைகளை விளக்கிப் பேசினார். திமுக அரசு செய்த சமூக நலத்திட்டங்கள் மற்றும் அடுத்து செய்ய இருக்கும் திட்டங்கள், அரசியல் களத்தில் எதிர்கொண்டு இருக்கும் சவால்கள், மாநில சுயாட்சிக்கு இப்போது இருக்கும் ஆபத்துகளையும், அது யாரால் ஏற்படுகிறது. அதனை திமுக அரசு எப்படி எதிர்கொள்கிறது என்பது குறித்தும் அமைச்சர் எ.வ.வேலு தொண்டர்கள் மத்தியில் எடுத்துக் கூறினார்.

அவர் பேசும்போது, ஒரு மாநிலத்தின் ஆளுநர் என்பவர் மாநில அரசுக்கும் ஒன்றிய அரசுக்கும் பாலமாக திகழ வேண்டும். மாநில அரசு செய்யும் பணிகளுக்கு ஊக்கம் அளிக்கும் வகையில் செயல்பட வேண்டும். மாநில அரசுக்கு தேவையான திட்டங்களை ஒன்றிய அரசிடமிருந்து பெற்றுத் தர வேண்டும். இதை விட்டுவிட்டு இங்கு ஆளுநராக செயல்படுவர் 100 ஆண்டுகளுக்கு முன் தமிழ்நாட்டில் நடைபெற்றதை போல் மீண்டும் இரட்டை ஆட்சி முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று நினைப்பதாக குற்றம் சாட்டினார்.

திராவிட மாடல் ஆட்சி நடத்தும் திமுகவினருக்கு அமைச்சர் பதவி முக்கியமா?, சமூக நீதி முக்கியமா ? என்றால் சமூக நீதியே முக்கியம் என்று கூறுவார்கள் என நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு தெரிவித்தார். இந்தியாவில் அசுர வேகத்தில் வளர்ச்சி அடைந்து வரும் மாநிலங்களில் முதன்மையானதாக விளங்குவது தமிழ்நாடு என்றும், இங்கிருந்து யாரும் பீகார்க்கு வேலை தேடிச் செல்வதில்லை என்றும் தெரிவித்தார். மாறாக பீகாரிலிருந்து தான் இங்கு பலர் வேலைக்கு வந்துள்ளதாகவும், குறிப்பாக ஆளுநர் கூட பீகாரில் இருந்து இங்கு வந்துள்ளார் என்றும் கூறினார்.