அமெரிக்கர்களின் விசா இல்லா பயணத்திற்கு செக் வைத்து ஐரோப்பா!

Must read

மெரிக்கர்களின் விசா இல்லா பயணத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் தடைவிதித்துள்ளது.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், அமெரிக்கர்களின் விசா இல்லாப் பயணத்திற்கு தடைவிதிக்கும் முடிவுக்கு ஆதரவாக பெரும்பான்மையான உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

பல்கேரியா, குரோட்டியா, சைப்ரஸ், போலந்து மற்றும் ருமேனியா ஆகிய ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா இல்லா பயணத்திற்கு அனுமதி வழங்க அமெரிக்கா மறுத்ததை அடுத்து, ஐரோப்பிய யூனியன் இந்த முடிவை எடுத்துள்ளது.

அமெரிக்கர்கள் விசா இன்றி ஐரோப்பிய நாடுகளுக்குள் பயணிப்பதற்கான அனுமதியை இரண்டு மாதங்களுக்குள் ரத்து செய்ய, இந்த வாக்கெடுப்பின் மூலம் முடிவு செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடாளுமன்றத்தின் இந்த தீர்மானம் நடைமுறைக்கு வந்து விட்டால், ஐரோப்பாவில் வசிக்கும் அமெரிக்கர்கள், ஆண்டுதோறும் விசாவுக்காக 12 ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய கட்டாயம் ஏற்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பரஸ்பர ஒப்பந்தப்படி 5 ஐரோப்பிய நாடுகளின் குடிமக்கள் விசா இல்லா பயணத்திற்கு அனுமதி வழங்க அமெரிக்கா மறுத்ததன் எதிரொலியாகவே ஐரோப்பா இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆஸ்திரேலியா, புருனே, ஜப்பான் மற்றும் கனடா நாடுகளும் ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா இல்லா பயணத்திற்கு அண்மையில் அனுமதி மறுத்தன. ஆனால், அதனை விரைவில் திரும்பப் பெறுவதற்கான நடவடிக்கைகளை அந்த நாடுகள் மேற்கொண்டு வருவதால், அந்த நாடுகளில் இருந்து வருவோருக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்து ஐரோப்பா தற்போது எந்த ஆலோசனையும் மேற்கொள்ளவில்லை.

அதேநேரத்தில், ஜார்ஜியா நாட்டில் இருந்து வருவோருக்கான விசா நடைமுறைகளை ஐரோப்பிய ஒன்றியம் தளர்த்தி உள்ளது. அதன்படி ஜார்ஜிய நாட்டினர், 90 நாட்கள் விசா இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த எந்த ஒரு நாட்டிலும் தங்கி இருக்க முடியும்.

ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகிச் செல்வதற்கான நடவடிக்கைகளை பிரிட்டன் (Brexit) தொடங்கி உள்ள நிலையில், எஞ்சியுள்ள ஐரோப்பிய நாடுகள் தங்களது பொருளாதார, பாதுகாப்பு அம்சங்களை வலுப்படுத்திக் கொள்வதற்கான வழிமுறைகளை கண்டறிந்து நடைமுறைப்படுத்தி வருகின்றன.

அதே நேரம், (ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகல்) பிரெக்சிட் நிகழ்வுக்குப் பின்னர் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்காவின் அணுகுமுறையிலும் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதன், எதிரொலியே, ஐரோப்பிய ஒன்றியத்தில் உள்ள சில நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா இல்லா பயணத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் அமெரிக்காவின் நடவடிக்கை என கருதப்படுகிறது.

இந்த நிலையில், இனி பிரிட்டனில் இருந்து வரும் பயணிகளுக்கென, (Electronic System for Travel Authorisation (ESTA)) அமெரிக்கா செய்வதைப் போல மின்னணு தொழில்நுட்பம் மூலம் விசாவுக்கு அங்கீகாரம் வழங்கும் நடைமுறையை கொண்டுவருவது குறித்தும் பரிசீலித்து வருவதாக ஐரோப்பாவின் பாதுகாப்பு கவுன்சில் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் ஒன்றாக பிரிட்டன் இருந்த போது, விசாவுக்கான கட்டுப்பாடுகள் எதுவும் இல்லை.

More articles

Latest article