அடிஸ் அபாபா: ஆஃப்ரிக்க கண்டத்திலுள்ள எத்தியோபிய நாட்டில் ஒரேநாளில்(ஜுலை 29) 200 மில்லியனுக்கும் மேலான மரக் கன்றுகள் நடப்பட்டு உலக சாதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

வடகிழக்கு ஆஃப்ரிக்காவில் ஒரு காலத்தில் வளமாக இருந்த நாடுதான் எத்தியோபியா. ஆனால், பெருமுதலாளிகளுக்கு அந்நாட்டின் வளங்கள் தாரை வார்க்கப்பட்டதன் விளைவாக உலகின் மோசமான பஞ்ச பூமியாக மாறிப்போனது அந்நாடு. பட்டினியால் பல லட்சம் மக்கள் மாண்டுபோயினர்.

தற்போது அந்நாட்டின் பிரதமராக உள்ள அபிய் அகமது நாட்டின் வளத்தை மீட்டுருவாக்கம் செய்யும் முயற்சியாக மரக்கன்றுகள் நடும் திட்டத்தைக் கொண்டுவந்தார். இதன்படி, மொத்தம் 224 மில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டன. இதன்மூலம் ஏற்கனவே திட்டமிடப்பட்ட 200 மில்லியன் என்ற எண்ணிக்கை மிஞ்சப்பட்டுள்ளது.

அந்நாட்டில் 2019ம் ஆண்டின் மே மாதம் முதல் அக்டோபர் மாதம் வரையான காலகட்டத்தில் மொத்தம் 4 பில்லியன் மரக்கன்றுகள் நடுவதற்கு திட்டமிடப்பட்டுள்ளன. இதுவரை மொத்தம் 2.6 பில்லியன் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.