சென்னை:
தமிழகத்தில் புதிய பாடப்புத்தங்கள் கடந்த 4ந்தேதி வெளியிடப்பட்டன. சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டார்.
அப்போது 1வது, 6வது, 9வது, 11 வகுப்பு பாடங்களுக்கான புத்தகங்கள் வெளியிடப்பட்டது. இந்நிலையில், 11வது வகுப்பு தமிழ் பாடப்புத்தகத்தில் பல பிழைகள் இருப்பதாக கல்வியாளர்கள் புகார் கூறி உள்ளனர்.
11வது வகுப்பு தமிழ்ப்பாட புத்தகத்தில், இசைத்தமிழர் இருவர் என்ற பெயரில் இளையராஜா, ஏ.ஆர்.ரகுமான் குறித்த தகவல்கள் இடம் பெற்றுள்ளது.
அதில், இளையராஜா 1995-ம் ஆண்டில் கேரளம்-நிஷாகந்தி சங்கீத விருது வாங்கியுள்ளதாக கூறப்பட்டுள்ளது. அவர் 2016ம் ஆண்டுதான் அந்த விருதை வாங்கி உள்ளார் என்பதே உண்மை.
இந்த கேரளம் நிஷாகந்தி விருது அறிவிப்பே கடந்த 2015ம் ஆண்டுதான் தோற்றுவிக்கப்பட்டது என்பதால், அவர் எப்படி 1995ம் ஆண்டு விருது வாங்கியிருக்க முடியும் என கேள்வி எழுப்பபட்டு உள்ளது.
அதுபோல பாலிவுட் பாடகி லதா மங்கேஷ்கர் 1998ம் ஆண்டு வாங்கிய விருதை 1966ம் ஆண்டு தவறுதாக குறிப்பிடப்பட்டுள்ள தாகவும் புகார் கூறப்பட்டுள்ளது.
தேசிய அளவிலான நுழைவு தேர்வுகளை மாணவர்கள் எளிதில் எதிர்கொள்ளும் வகையில் புதிய பாடத்திட்டம் உருவாக்கப்பட் டுள்ளதாக கூறும் தமிழக அரசு, இதுபோன்ற தவறுகள் ஏற்டாத வண்ணம் சிறப்பாக செயல்பட்டிருக்க வேண்டும் என்றும், பள்ளிகளுக்கு புத்தகம் விநியோகம் செய்யப்படும் முன் தவறுகளை திருத்தி விநியோகம் செய்யுமாறும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.