காயத்ரி லிங்கேஸ்வரர் திருக்கோயில், பவானி, ஈரோடு மாவட்டம்


இத்தலத்தின் தல விருட்சமான இலந்தை மரத்தின் அடியில்தான் பராசர முனிவர் தனது ஆசிரமத்தை நிறுவி, தினமும் இறைவனை வணங்கி வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சங்மேஸ்வரரை வணங்குவதற்கு முன், சற்று தூரத்திலுள்ள காவிரியாற்று ஓரம் சென்று தினமும் நித்யகர்ம அனுஷ்டானத்தை தொடர்ந்து செய்து வந்தாராம். அதுபோல் அவர் தொடர்ந்து அந்த இடத்தில் காயத்ரி மந்திரத்தை தொடர்ந்து 12 ஆயிரம் கோடி முறை உச்சரித்த காரணத்தால், “காயத்ரி லிங்கேஸ்வரர்” அங்கே தானாகவே தோன்றினார்.

காயத்ரி லிங்கேஸ்வரர் முன்னால் சென்று, காயத்ரி மந்திரத்தை சொல்லத் தகுதியுடைய, உச்சரிப்பு பிறழாமல் சொல்லக்கூடியவர்கள், ஒரு தடவை சொன்னால் போதும், இலட்சம் தடவை சொன்ன பலன் கிட்டும். மூன்று நதிகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் புகழ்பெற்ற சங்கமேஸ்வரர் கோயில் அருகில் காவிரியாற்றின் ஓரத்தில் தனித்து நின்று தன்னிகரில்லாத பலன்களை பக்தர்களுக்கு வழங்கி வருகிறார் காயத்ரி லிங்கேஸ்வரர். இத்தலத்தில் மூன்று நதிகள் பாய்வதால் “தீர்த்த சங்கமம்” என்றும், ஒரே ராஜகோபுரத்தின் கீழ், சிவன் மற்றும் விஷ்ணு கோயில்கள் அமைந்துள்ளதால் “சேத்திர சங்கமம்” என்றும், அமிர்தலிங்கேஸ்வரர், சகஸ்ரலிங்கேஸ்வரர் மற்றும் காயத்ரி லிங்கேஸ்வரர் என பல்வேறு மூர்த்திகள் ஒருங்கினைந்து உள்ளதால் “மூர்த்தி சங்கமம்” என்றும் அழைக்கப்படுகிறது.

ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோயிலைச் சுற்றிலும் பல்வேறு லிங்கங்கள் இருந்தாலும், கோயில் வளாகத்திலேயே காவிரியாற்றோரம் “காயத்ரி லிங்கேஸ்வரர்” தனி சன்னதியில் அருள்பாலிக்கிறார். இவரை வணங்கிச் சென்றால் வேண்டிய வரங்களை உடனே பெறலாம் என்பது ஐதீகம்.

பராசர முனிவர், குபேரர், சூரியன் ஆகியோர் வந்து வணங்கிய தலம். இத்தலத்தை சுற்றிலும் சங்ககிரி மலை, திருச்செங்கோட்டில் உள்ள நாககிரி, பெருமாள் மலையில் உள்ள மங்கலகிரி, ஊராட்சிகோட்டையில் உள்ள வேதகிரி மற்றும் காவிரியாற்று ஒரம் பதுமகிரி ஆகிய மலைகளுக்கு நடுவே இருப்பதால் பாவனி ஸ்தலம் “பஞ்சகிரி மத்திய பிரதேசம்” என அழைக்கப்பட்டது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார்.

திருவிழா:

மகா சிவராத்திரி, மார்கழி திருவாதிரை.

வேண்டுகோள்:

திருமணத்தடை நீங்க, குழந்தைச் செல்வம் பெற, கல்வியில் சிறந்து விளங்க, நெசவுத்தொழில் விருத்தியடைய இறைவனை வேண்டிக்கொள்ளலாம்.

நேர்த்திக்கடன்:

வேண்டுகோள் நிறைவேறியவர்கள் இறைவனுக்குத் திருமுழுக்காட்டு செய்து, புத்தாடை அணிவித்து, சிறப்பு பூசைகள் செய்து நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்