சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வழங்கக்கோரி டிபிஐ வளாகத்தில் அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களின் போராட்டம் இன்று 6வது நாளாக தொடர்கிறது. இரவு நேரங்களிலும் மெழுகுவர்த்தி ஏந்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், அரசு இடை நிலைப்பள்ளி ஆசிரியர்களுக்கு இன்றுமுதல் எண்ணும் எழுத்தும் பயிற்சி அறிவித்துள்ளதால், அதை புறக்கணித்து தொடர் போராட்டங்களை முன்னெடுக்க  இடைநிலை ஆசிரியர்கள் சங்கங்கள் முடிவு எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.  திமுக அரசு தனது தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, தங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என இடைநிலை ஆசிரியர்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.  ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டும் இதுபோன்ற ஒரு போராட்டம் நடைபெற்றத.

கடந்த செப்டம்பர் மாதம் 6ந்தேதி  சம வேலைக்கு சம ஊதியம் என்ற  கோரிக்கை அட்டை அணிந்து  பணிக்குச் சென்றனர். இதைத்தொடர்ந்து சென்னையில் உள்ள  டிபிஐ வளாகத்தில் கூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பின்னர் நடைபெற்ற பேச்சுவார்த்தையை தொடர்ந்து போராட்டம் முடிவுக்கு வந்தது. தொடர்ந்து, அவ்வப்போது சிறு சிறு போராட்டங்களை நடத்தி வந்த ஆசிரியர் சங்கங்கள், சென்னையில் கூடி கடந்த செப்டம்பர்  மாதம் 28ந்தேதி  முதல்  டிபிஐ வளாகத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  பல பெண் இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் குழந்தைகளுடன் வந்து,  உண்ணாவிரத போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னையில் அவ்வப்போது மழை பெய்து வரும் நிலையில்,  அதையும் பொருட்படுத்தாமல் போராட்டத்தை  ஆசிரியர்கள் தொடர்ந்து வருகின்றனர். இதனால் பல ஆசிரியர்கள் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடத்து, அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதைத்தொடர்ந்து நேற்று   (அக்டோபர் 2ந்தேதி) உண்ணாவிரதம் இருக்கும் ஆசிரியர்களுடன் அமைச்சர் மற்றும் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினார். பள்ளிக்கல்வித்துறை செயலாளர் கார்லா உஷா உடன் இரண்டு முறையும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி உடன் நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.

இதில் முடிவு எட்டப்படவில்லை. இதையடுத்து, ஆசிரியர்களின் போராட்டம் தொடர்ந்து வருகிறது. நேற்று இரவு மெழுகுவர்த்தி ஏந்தி தங்களது எதிர்ப்பை பதிவு செய்தனர்.  அதைத்தொடர்ந்து இன்ளு 6வது நாளாக  இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் தொடர்கிறது.

இதற்கிடையில், காலைண்டு பரிட்சை முடிந்து இன்று உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகள் தொடங்கி உள்ள நிலையில், இடைநிலை ஆசிரியர்களுக்கு இன்று முதல் பயிற்சி வகுப்புகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, இடைநிலை ஆசிரியர்களுக்கு ‘எண்ணும் எழுத்தும் திட்டத்திற்கு’ இன்று (அக் 3) முதல் 8ஆம் தேதி வரை  பயிற்சி அளிக்கப்படுகிறது. பயிற்சிக்கு செல்லாத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்ல வேண்டும் என தொடக்க கல்வித்துறை இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

ஆனால், பல ஆசிரியர் சங்கங்கள் இந்த பயிற்சி வகுப்பை புறக்கணிப்பதாக அறிவித்து உள்ளது. இதுதொடர்பாக இடைநிலை பதிவு மூப்பு பட்டதாரி ஆசிரியர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையை வலியுறுத்தி தொடர்ந்து 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம். தங்களின் கோரிக்கை நிறைவேற்றப்படும் வரை போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.

மேலும், போராட்ட களத்திற்கு வர முடியாத ஆசிரியர்கள், இன்று முதல் நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் திட்டப் பயிற்சியை புறக்கணிக்க வேண்டும் எனவும், போராட்ட களத்திற்கு வராத ஆசிரியர்கள் பள்ளிக்குச் செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர்.

சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என முதலமைச்சர் அறிவிக்கும் வரை தொடர்ந்து போராட்டம் நடைபெறும் எனவும், முதல்வர் அறிவித்தால் உடனடியாக போராட்டத்தை வாபஸ் பெற்று பணிக்குச் செல்வோம் எனவும் கூறுகின்றனர்.

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  ஆசிரியர்களில் சுமார் 237 பேர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். பெண் ஆசிரியைகள் 113 பேர், ஆண் ஆசிரியர்கள் 102 பேர் மருத்துவமனையிலும், களத்திலேயே 22 பேர் என 237 பேர் மயக்கம் அடைந்து சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இது குறித்து இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கம் வெளியிட்ட அறிக்கையில், “ஏற்கனவே 14 ஆண்டுகள் கடந்த நிலையில், மீண்டும் மீண்டும் ஏதாவது ஒரு காரணத்தைக் கூறி காலதாமதம் செய்வது ஏற்புடையது அல்ல என்பதால், எங்களுடைய இந்த கோரிக்கை நிறைவேறும் வரை தொடர்ந்து காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை நடத்த உள்ளோம். அதனால் நாளை நடைபெறும் இரண்டாம் கட்ட எண்ணும் எழுத்தும் பயிற்சியை புறக்கணிக்கிறோம் என்பதை தெரிவித்துக் கொள்கிறோம். பயிற்சிக்கு ஆசிரியர்கள் பள்ளியையும் புறக்கணித்திடவும் கேட்டுக் கொள்கிறோம். இதற்கு ஆதரவு தெரிவித்து களத்தில் உள்ள ஆசிரியர்களும், களத்தில் இல்லாமல் சூழ்நிலையால் வர முடியாத ஆசிரியர்களும் முழுவதுமான ஆதரவை அளிக்க வேண்டும். இடைநிலை இனம் அழிந்து கொண்டிருப்பதை நன்கு உணர்ந்த எம்மின தோழமை மூத்த ஆசிரியர் சங்கங்களும், இன உணர்வோடுள்ள ஆசிரியர்களும் இந்த போராட்டத்திற்கு தங்களின் முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” எனத் தெரிவித்துள்ளனர்.