சென்னை: சம வேலைக்கு சம ஊதியம் வேண்டும் என்று 3வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இடைநிலை ஆசிரியர்களுடனான பள்ளிக்கல்வித்துறை செயலரின் பேச்சுவார்த்மதை தோல்வி அடைந்துள்ளது. இதையடுத்து, தங்களது போராட்டம் தொடரும் இடைநிலை ஆசிரியர்கள் சங்கத்தின் அறிவித்து உள்ளனர்.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் 2009 மே 31-ம் தேதி நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும், அதே ஆண்டு ஜூன்1-ல் பணிநியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு மற்றொரு ஊதியமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் வித்தியாசத்தில் அடிப்படை ஊதியத்தில் ரூ.3,170 குறைந்துள்ளது. இதனால் 20,000-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதையடுத்து சம வேலைக்குச் சம ஊதியம் வழங்கக் கோரி இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் இயக்கம் (எஸ்எஸ்டிஏ) சார்பில் சென்னை டிபிஐ வளாகத்தில் ஆசிரியர்கள் 3-வது நாளாக தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தில் மாநில முழுவதும் இருந்து ஆண்கள், பண்கள் என சுமார் 2,500 பேர் பங்கேற்றுள்ளனர்.
இவர்கள் தங்கள் கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். சாப்பிடாமல் போராட்டத்தில் இறங்கி உள்ளதால், பல ஆசியர்களுக்கு உடல்நலப் பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இது அரசு ஊழியர்கள் சங்கத்தினரும் கவனத்திற்கும் கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பள்ளிக் கல்வித் துறை செயலாளர் இன்று (டிச.29 ) பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால், இந்த பேச்சு வார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்த எஸ்எஸ்டிஏ பொதுச்செயலாளர் ஜே.ராபர்ட், “பள்ளிக் கல்வித் துறை செயலாளர் தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. கோரிக்கைகளை நிறைவேற்ற கூடுதல் கால அவகாசம் வேண்டும் என்று அரசு தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. எங்களது தரப்பில் ஏதாவது தேதியை குறிப்பிட்ட அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்தோம். அரசு சார்பில் நாளை அமைச்சரிடம் பேசி விட்டு தெரிவிப்பதாக கூறி உள்ளனர். அதனால் இன்றைய பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது.
எங்களது பிரச்சினையில், முதல்வர் இதில் தலையிட்டு எங்களது கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். எந்த மாதத்தில் இருந்து எங்களுக்கு ஊதியம் கிடைக்கும் என்று முதல்வர் வாக்குறுதி அளிக்க வேண்டும். அப்படி தெரிவித்தால் நாங்கள் போராட்டத்தை கைவிட தயாராக உள்ளோம். கோரிக்கை நிறைவேறும் வரை எங்களது போராட்டம் தொடரும்” என்றார்.
ஆசிரியர்களின் போராட்டத்துக்கு பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வரும் நிலையில், அரசியல் சங்கமான ஜாக்டோ, ஜியோ இதுகுறித்து ஆலோசித்து வருவதாக கூறப்படுகிறது. அவர்களும் ஆசிரியர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் குதித்தால், அரசு பணிகள் ஸ்தம்பித்து விடும் என அஞ்சப்படுகிறது.