சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, அதிமுக, பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக ஏப்ரல் 2ந்தேதி ஒரே மேடையில் பிரதமர் மோடியுடன் இபிஎஸ், ஒபிஎஸ் தேர்தல் பிரசாரம் மேற்கொள்கின்றனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் 13 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், தேர்தல் பிரசாரம் அனல் பறக்கிறது. இந்தநிலையில், அடுத்த மாதம் ஏப்ரல் 2 ந் தேதி அன்று மதுரையில் மாபெரும் மாபெரும் தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களுக்கு பிரதமர் மோடி உள்பட கூட்டணி கட்சித் தலைவர்கள் ஆதரவு திரட்டுகிறார்கள்.
அ.தி.மு.க. கூட்டணியில் வேட்பாளர்களை ஆதரித்து பிரசாரம் செய்வதற்காக பிரதமர் நரேந்திரமோடி வருகிற 30-ந்தேதி தமிழகம் வருகிறார். அன்றைய தினம், திருப்பூர் மாவட்டம் தாராபுரம்(தனி) தொகுதியில் பா.ஜ.க. சார்பில் போட்டியிடும் அக்கட்சியின் மாநில தலைவர் எல்.முருகனை ஆதரித்து பிரசாரம் செய்கிறார்.
மேலும் திருப்பூர், கோவை, கரூர் மாவட்ட சட்டமன்ற தொகுதிகளில் போட்டியிடும் பா.ஜ.க. மற்றும் அண்ணா தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார்.
பிரதமர் கலந்துகொள்ள இருக்கும் தாராபுரம் பொதுக்கூட்டத்திற்காக, தாராபுரம் உடுமலைரோடு ஜீவா காலனி பகுதியில் 63 ஏக்கரில் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அங்கு பொதுக்கூட்ட மேடை மற்றும் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே பிரதமரின் பாதுகாப்பு அதிகாரிகள் புதுடெல்லியில் இருந்து வருகை தர உள்ளனர். அவர்கள் பிரச்சார கூட்டம் நடைபெறும் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்கின்றனர்.
அதைத்தொடர்ந்து, 2வது கட்டமாக அடுத்த மாதம் (ஏப்ரல்) 2-ந்தேதி மீண்டும் மோடி தமிழகம் வருகிறார். அனறைய தினம், மதுரை, நாகர்கோவில் ஆகிய 2 நகரங்களில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். மதுரையில் நடைபெறும் பிரச்சார கூட்டத்தில் பிரதமர் மோடியுடன் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக தமிழக பாரதீய ஜனதா பொறுப்பாளர் சி.டி.ரவி தெரிவித்துள்ளார்.
அதைத்தொடர்ந்து நாகர்கோவிலில் நடைபெறும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் பாராளுமன்ற தொகுதி வேட்பாளர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டங்களில் போட்டியிடும் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டுகிறார்.