சென்னை: சென்னையில் மழை பாதிப்பு குறித்து ஆய்வு செய்த முன்னாள் முதல்வரும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, சென்னையில் முறையாக வடிகால் பராமரிப்பு செய்யப்பட வில்லை என திமுக அரச மீது குற்றம் சாட்டினார். இதற்கு பதிலடி கொடுத்துள்ள அமைச்சர் தா.மோ.அன்பரசன், சென்னையில் மழைநீர் தேங்க இபிஎஸ்தான் காரணம் என தெரிவித்து உள்ளார்.

சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழை காரணமாக, சென்னையின் சில பகுதிகள் மற்றும் புறநகர் பகுதிகளான பூந்தமல்லி, மாங்காடு, அய்யப்பந்தாங்கல், முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டு வெள்ளக்காடாக மாறியது. அதிலும் குறிப்பாக சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 156-வது வார்டான முகலிவாக்கத்தில் உள்ள திருவள்ளுவர் நகர், நடராஜன் தெரு, தனலட்சுமி நகர் பகுதிகளில் இடுப்புக்கு மேல் தண்ணீர் தேங்கியதால் அப்பகுதி மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். ஆனால், புறநகர் பகுதிகளில் கவனம் செலுத்தாமல், மாநகராட்சியும், தமிழகஅரசும் சென்னையின் நகர்ப்பகுதியை மட்டுமே கண்காணிப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர்.

ஆனால் புறநகர் பகுதிகளில் வீடுகளை சுற்றிலும் மழை நீர் தேங்கி இருந்ததால் மக்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள் முடங்கினர். இதனால் தீயணைப்பு வீரர்களும், போலீசாரும் படகுகளை கொண்டு சென்று வீடுகளில் தவித்த மக்களை பத்திரமாக வெளியே கொண்டு வந்து பாதுகாப்பான இடங்களில் தங்க வைத்தனர். கீழ்த்தளங்களில் வசித்த மக்கள் மாடி வீடுகளுக்கு சென்று தஞ்சம் புகுந்தனர். சிலர் அங்கிருந்து வெளியேறி உறவினர் வீடுகளுக்கு சென்றனர். போரூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் அதிகளவு வருவதால் முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிகள் தொடர்ந்து தண்ணீரில் மிதக்கிறது.

சென்னை முகலிவாக்கம் பகுதியில் மழை வெள்ள பாதிப்புகளை சட்டப்பேரவை எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி ஆய்வு செய்தார். ஆய்வின் போது பாதிக்கப்பட்ட பகுதிகளை பார்வையிட்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்த பின்னர், செய்தியாளர்களிடம் பேசும்போது,  “தமிழகத்தில் மிக கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது இதனால் மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். திமுக அரசு தண்ணீர் எங்கும் தேங்கவில்லை என்று தவறான செய்தியை தெரிவித்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார்.

இதுதொடர்பாக இன்று மாநகராட்சியிலும் ஆலோசனை நடைபெற்றது. ஆணையர் ககன்தீப் சிங் பேடி, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன், மழைநீர் அகற்றும்படி அறிவுறுத்தினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த  அமைச்சர் தா.மோ.அன்பரசன், “ஆலந்தூர் பகுதியில் மழைநீர் வெள்ளம் ஏற்பட காரணமே எடப்பாடி பழனிச்சாமிதான். திருவள்ளுவர் நகர், கணேஷ் நகரில் கால்வாய் உயர்த்தாமல் இருப்பதே மழை நீர் தேங்க காரணம். கடந்த ஆட்சியில் பல்வேறு திட்டங்களை முன்வைத்து நிதி கேட்டோம். ஆனால் அதனை எடப்பாடி பழனிச்சாமி ஒதுக்கவில்லை. ஆனால் தற்போது யோக்கியவாதி போல பேசுகிறார். நான் மூன்று நாட்களாக தொகுதியில்தான் இருக்கிறேன். ரூ. 120 கோடி செலவில் போரூரில் இருந்து மழைநீர் வெளியே செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.

முன்னதாக அந்த பகுதிக்கு சென்று ஆய்வு செய்த அமைச்சர் தா.மோ.அன்பரசன்,  போரூர் ஏரியில் இருந்து வரும் உபரி நீர் அதிகளவு வருவதால் முகலிவாக்கம், கொளப்பாக்கம் பகுதிகள் தொடர்ந்து தண்ணீரில் தேங்கியிருப்பதாககூறியதுடன்,  சென்னை மாநகராட்சி அதிகாரிகள், பொதுப்பணித் துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை அழைத்து, அந்த  பகுதியில் தேங்கி நிற்கும் தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை மேற்கொண்டனர். அதிகாரிகளும், அமைச்சரும் மின் மோட்டார்களை வைத்து,  தண்ணீர் வடிய நடவடிக்கை எடுத்ததுடன், தண்ணீர் வெளியேறும் வகையில்,  பொக்லைன் எந்திரம் மூலம் தற்காலிக வழியை ஏற்படுத்தினர். தற்போது, வெளியேற்றப்படும் மழைநீர், அந்த வாய்க்கால்  வழியாக அடையாறு ஆற்றில்  செல்கிறது.

மழைநீர் தேங்கவில்லை என்பது பொய்: சென்னையில் மழை பாதிப்புகளை ஆய்வு செய்த எடப்பாடி பழனிச்சாமி குற்றச்சாட்டு!