வாக்காளர் அடையாள அட்டைகளில் மோசடி தொடர்பாக எதிர்க்கட்சிகள் கேள்வியெழுப்பிய நிலையில் இந்த குளறுபடிக்கு மூன்று மாதத்தில் தீர்வு காண இருப்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
இந்தியாவில் மொத்தம் சுமார் 99 கோடி பேர் வாக்குரிமை பெற்றுள்ளனர், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான வாக்காளர் அடையாள (EPIC) எண் ஒதுக்கப்படுகிறது.
இந்த நிலையில், ஒரே EPIC எண்ணைக் கொண்ட வாக்காளர் அடையாள அட்டைகளின் பட்டியலை எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கடந்த சில தினங்களுக்கு முன் வெளியிட்டனர்.

முதலில் இதனை ஏற்க மறுத்து மறுப்பு தெரிவித்த தேர்தல் ஆணையம், இரண்டு மாநிலங்களில் ஒரே EPIC அட்டை எண் இருப்பதை சுட்டிக்காட்டியதை அடுத்து, பதிவு அதிகாரிகள் தவறான எண்ணெழுத்து தொடரைப் பயன்படுத்துவதால் 2000 ஆம் ஆண்டு முதல் EPIC இன் இந்த தவறு நிகழ்ந்து வருவதாக நூதன விளக்கம் தந்துள்ளது.
மேலும், இந்த சிக்கலை மூன்று மாதத்தில் சரிசெய்து தொழில்நுட்பம் சார்ந்த தளத்தை புதுப்பிப்பதாகக் கூறியுள்ளது.
இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ஒவ்வொரு வாக்காளருக்கும் தனித்துவமான EPIC எண் ஒதுக்கப்படுவதை தேர்தல் ஆணையம் உறுதி செய்யும் என்று கூறியுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இந்த நூதன விளக்கத்தை அடுத்து, ECI இன் தேர்தல் கையேடு பதிவு அதிகாரிகள் தெளிவான வழிகாட்டுதல்களைக் கொண்டிருந்தபோது “தவறான தொடர்” எவ்வாறு பயன்படுத்தப்பட்டது?
இதைத் தவிர்க்க வேண்டிய மென்பொருளுக்கு என்ன ஆனது?
2000 ஆம் ஆண்டு முதல் இது நடந்ததாக கூறியுள்ள ECI எதிர்க்கட்சிகள் அதைச் சுட்டிக்காட்டும் வரை 25 ஆண்டுகளாக ஏன் எதுவும் செய்யவில்லை?
என்று பல்வேறு தரப்பினரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
மேலும், இந்திய தேர்தல் ஆணையம் தனது விளக்க அறிக்கையில் தற்போது எத்தனை போலி EPICகள் உள்ளன என்பதை ECI இன்னும் ஏன் வெளியிடவில்லை என்றும் யாரைப் பாதுகாக்க தேர்தல் ஆணையம் இதை மறைக்கிறது என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.