சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் அரசு உதவி பெறும் பள்ளியில் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ஒட்டுமொத்த இந்தியாவுமே நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்த வருகிறது என்றும்,  பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாரா? என கேள்வி எழுப்பினார்.

  • காலை உணவு திட்டத்தில் உணவின் தரம் குறைய கூடாது.
  • பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற  வேண்டும்
  •  ஒட்டுமொத்த இந்தியாவுமே நீட் தேர்வை எதிர்க்கிறது 
  • திமுக அரசு கொண்டு வரும் திட்டத்துக்கு மக்கள் பாராட்டு

திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் ஒன்றியம், கீழச்சேரி கிராமத்தில் உள்ள புனித அன்னாள் அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளியில், காலை உணவு திட்டத்தின் விரிவாக்க திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இத்திட்டத்தின் மூலம் உள்ள 3,995 அரசு உதவி பெறும் தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 2 லட்சத்து 23 ஆயிரத்து 536 குழந்தைகள் பயனடைவார்கள். தொடர்ந்து குழந்தைகளுடன் அமர்ந்து அவர் உணவு உண்டார். அப்போது, அருகில் அமர்ந்திருந்த சிறுமிகளுக்கு காலை உணவை ஊட்டிவிட்டு அவர்களுடன் பேசினார்.

பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின்,  காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்து மிக மிக மகிழ்ச்சியோடு உங்கள் முன் நின்று கொண்டிருக்கிறேன்.   பெண்கள், குழந்தைகள், மாணவர்கள், இளைஞர்கள் என அனைத்துத் தரப்பினருக்கும் தமிழக அரசு சிறப்புத் திட்டங்களை செயல்படுத்திவருகிறது. அந்த வகையில், தமிழ்நாட்டு மாணவர்கள் கல்வியை உறுதி செய்ய பெற்றோரின் பாசத்தோடு உருவாக்கப்பட்ட திட்டம் தான் இந்த காலை உணவுத் திட்டம். கடுமையான நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

பள்ளிக்கு வரும் குழந்தைகளின் பசி போக்குவதற்காக உருவாக்கப்பட்ட திட்டம் தான் காலை உணவு திட்டம் என்றவர், பெற்றோருக்கே உரிய பாச உணர்வோடு நான் தொடங்கிய திட்டம் தான் காலை உணவு திட்டம் என்றார். இந்த காலை உணவு திட்டம் மூலம் தமிழகம் முழுவதும் 20 லட்சத்து 70 ஆயிரம் மாணவர்களுக்கு காலை உணவு வழங்கப்படும் என்று கூறினார்.

காலை உணவு திட்டத்தில் எந்த இடத்திலும் உணவின் தரம் குறைய கூடாது என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டவர்,  ஏழை, எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பதன் மூலம் நலமான, வளமான, அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம் என்றும்,   காலை உணவு திட்டம் பெற்றோருக்கான சுமையை குறைத்து பள்ளி வரும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரித்துள்ளது.  இதன் காரணமாக,  அரசுக்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, குழந்தைகள் பள்ளிக்குப் பசியுடன் வரக் கூடாது என்றவர்,  மாணவர்களின் கல்விக்கு எந்த தடை வந்தாலும் அதை உடைப்பதே தி.மு.க.வின் பணி.  பொய் செய்திகளை உருவாக்கி குளிர்காய நினைப்பவர்களின் எண்ணம் நடக்காது.  நாம் தொடங்கிய காலை உணவு திட்டம் கனடா போன்ற நாடுகளில் தொடங்கப்பட்டு உள்ளது என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய   முதலமைச்சர் ஸ்டாலின்,  நீட் தேர்வு எதிர்ப்பில் தமிழகத்தின் வழியில் ஒட்டுமொத்த இந்தியாவுமே செல்கிறது. நீட் தேர்வை பல தலைவர்கள், மாணவர் அமைப்புகள் தற்போது எதிர்த்து வருகின்றன. தமிழகம் நிட் தேர்வை எதிர்த்தபோது, முதலில் கேள்வி எழுப்பியவர்கள் கூட தற்போது ஆதரிக்கின்றனர் என்று கூறியவர்,

பொதுப்பட்டியலில் உள்ள கல்வியை மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாரா? மாநிலப் பட்டியலுக்கு மாற்றும் ஆக்கப்பூர்வமான செயலை செய்ய ஒன்றிய அரசு தயாரா?” என  கேள்வி எழுப்பியதுடன்,

மாணவர்கள் படிக்க எந்தத் தடையும் இருக்கக் கூடாது என்பதே எனது எண்ணம். அது பசியோ, நீட் தேர்வோ, புதிய கல்விக் கொள்கையோ!. தமிழ்நாட்டு மாணவர்களின் கல்விக்கான தடை எதுவாக இருந்தாலும், அதை நாங்கள் தகர்ப்போம். கல்வி எனும் சொத்தை மாணவர்கள் பெற உறுதுணையாக இருப்போம்.

மாணவர்களே, நீங்கள் கல்வியில் கவனம் செலுத்துங்கள். அதுமட்டும்தான் யாரும் திருட முடியாத சொத்து. நீங்கள் உயர உங்கள் வீடு உயரும் தொடர்ந்து நாடும் உயரும்.

மேலும், திமுக அரசு கொண்டு வரும் ஒவ்வொரு திட்டத்தையும் மக்கள் பாராட்டுகின்றனர்.  ஆனால் அதை சிலர் விமர்சித்து வருகின்றனர.   ஈரை பேனாக்கும் வேலையை செய்பவர்கள் நம்மை பாராட்டமாட்டார்கள்.

இவ்வாறு அவர் பேசினார்.