டெல்லி: புகையிலை பொருட்கள் பாக்கெட்களின் மேல் புதிய சுகாதார எச்சரிக்கைகளை வெளியிட வேண்டும் என்று அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக, மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடிதம் ஒன்றை எழுதி உள்ளது. அந்த கடிதத்தில் கூறியிருப்பதாவது: சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கான விதிகள் 2008ம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த விதிகளில் அவ்வப்போது சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பின்னர் புகையிலை பொருட்களுக்கான புதிய சுகாதார எச்சரிக்கைகள் ஜூன் 21ம் தேதி வெளியிடப்பட்டன. அதன்படி, புகையிலை பொருட்களின் அட்டைகளின் இரு பக்கமும் 85% புகைப்படத்துடன் கூடிய சுகாதார எச்சரிக்கையை அச்சிட வேண்டும்.

டிசம்பர் 1ம் தேதிக்கு பின்னர் தயாரிக்கப்படும் அனைத்து புகையிலை பொருட்களின் பாக்கெட்களின் அட்டைகளில் இந்த புதிய சுகாதார எச்சரிக்கையை வெளியிட வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.